ஷ்ரேயாஸ் ஐயர் pt web
T20

ஷ்ரேயாஸ் ஐயர் 2.0 : மூர்க்கம், யுக்தி, அனுபவம், தன்னம்பிக்கை..

அதிகமான சராசரியோடு குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் வீரர்களால் இந்திய டி20 அணி நிரம்பி வழியும் சூழலில், ஷ்ரேயாஸ் ஐயரையும் அணிக்குள் சேர்ப்பது மேலும் குழப்பை ஏற்படுத்தும்

அங்கேஷ்வர்

குறைவான ஸ்ட்ரைக் ரேட்

ஷ்ரேயாஸ் ஐயர்.. கடைசியாக இந்திய அணிக்காக டி20 தொடரில் ஆடியது 2023.. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெங்களூருவில் நடந்த அந்தப் போட்டியில் 37 பந்துகளில் 57 ரன்களைக் குவித்திருந்தார். இதனையடுத்து இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடர் உட்பட 8 தொடர்களை ஆடியிருக்கிறது.. ஆனால், எதிலும் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வாகவில்லை.

கிரிக்கெட் வல்லுநர்கள் இதற்குக் கூறிய காரணம்.. அதிகமான சராசரியோடு குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் வீரர்களால் இந்திய டி20 அணி நிரம்பி வழியும் சூழலில், ஷ்ரேயாஸ் ஐயரையும் அணிக்குள் சேர்ப்பது மேலும் குழப்பை ஏற்படுத்தும் என்றனர். அவர்களது கூற்றுப்படி அதுவும் சரிதான்.

2019 முதல் 2023 வரையிலான 5 ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அவரது ஸ்ட்ரைக் ரேட் 140+ என இருந்திருக்கிறது. எண்கள் எப்போதும் பொய் சொல்வதில்லைதானே. ஒட்டுமொத்தமாக அவரது டி20 ஸ்ட்ரைக் ரேட் 136.12; அவரது சராசரி 30.66.. மாறிவரும் டி20 உலகில் இது போதுமானதல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.. அதுமட்டுமின்றி, ஷ்ரேயாஸ் களமிறங்கும் மூன்று மற்றும் நான்காம் இடங்களில் ஆடுவதற்காக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரியான் பராக் என எடுத்தஎடுப்பில் சிக்சர்களைப் பறக்கவிடும் வீரர்கள் அணிக்குள் நுழைந்தனர்.

ஆடிவிட்டால் முடிகிறது கதை

சரி,, இளம் வீரர்கள் களத்தில் நுழைந்தால் என்ன? நம்மால் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க முடியாதுதானே? அதற்கு ஏற்ப நாமும் ஆடிவிட்டால் முடிந்துபோகிறது கதை... 2025 ஐபிஎல் தொடரில் தனக்கான கதையை எழுதத் தொடங்கினார் ஷ்ரேயாஸ் ஐயர்.. மொத்தம் 17 போட்டிகள்.. 607 ரன்கள்... 50.33 சராசரியில் 175 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார் ஷ்ரேயாஸ்.. இதில் 6 அரைசதங்களும் அடக்கம்.. பஞ்சாப் அணிக்காக அடிக்கப்பட்ட ரன்களில் கிட்டத்தட்ட 20% ரன்களை ஷ்ரேயாஸ் மட்டுமே அடித்துக்கொடுத்திருக்கிறார். மற்ற ஐபிஎல் அணிகளில் மூன்று மற்றும் நான்காம் இடங்களில் ஆடிய வீரர்களின் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டை ஒப்பிட்டால் ஐயரின் ஸ்ட்ரைக் ரேட் மிக அதிகம்.. மும்பை இந்தியன்ஸ் அணியின் தூண் சூர்யகுமார் யாதவ் மட்டுமே 65.18 சராசரியுடன், 167 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார்..

ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த அதிரடிக்கு முக்கியக் காரணம் பலவீனங்களை எல்லாம் பலமாக மாற்றிய அவரது திறன். 2024 ஆம் ஆண்டு இறுதிவரை புல் மற்றும் ஹூக் ஷாட்களுக்கு எதிராக அவரது சராசரி 18.3. தனது விக்கெட்டை அதிகமாகப் பறிகொடுத்ததும் அந்த பந்துகளுக்குத்தான். ஆனால், தற்போதோ அவரது சராசரி 88.. அந்த ஷாட்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 226... குறிப்பிட்ட பந்திற்கு அவுட்டாகிவிடுவார் என்ற நிலை மாறி, அந்தப் பந்தினை ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு நகர்ந்துள்ளார் ஷ்ரேயாஸ். கடந்த ஆறுமாதங்களில், பேட்டிங் டெக்னிக்கில் அவர் செய்த சிறு மாற்றம் அவரை உலகத்தரம் வாய்ந்த வீரராக மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள். இதன் காரணமாக, பவுண்டரிகளை அடிக்க அவர் எடுத்துக்கொள்ளும் பந்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதாவது BPB - balls per boundary.. நடப்பு சீசனில் BPBயின் சராசரி 4.3.. நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.. இந்த சீசனில் ஜாஸ் பட்லரின் சராசரி இது. கிட்டத்தட்ட ஒரு பவர் ஹிட்டருக்கு இணையாக ஆடிக்கொண்டிருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர்.

மூர்க்கம், யுக்தி, ஷ்ரேயாஸ்

18 ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் ஒரு அங்கமாக இருக்கிறது என்றாலும், தனது மூர்க்க குணத்தையும் கோப்பையை வெல்வதற்கான சாத்தியத்தையும் வெளிப்படுத்தியது இந்த சீசனில்தான். தொடர் முழுவதும் தரமான கிரிக்கெட்டை ஆடியிருக்கிறது. தோற்ற எந்த ஒரு போட்டியையும் அத்தனை எளிதாக விட்டுக் கொடுத்துவிடவில்லை. அணியிலிருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் தனது வேலை என்ன என்பதும் அதை எப்போது எப்படி செயல்படுத்துவது என்பதும் தெரியும்.. எக்ஸிக்யூசன் என்பார்களே.. அதில் பல அணிகள் நடப்பு சீசனில் தோற்றுள்ளன.. ஆனால், தெளிவான திட்டத்தோடு அதில் வெற்றிபெற்றுள்ளது பஞ்சாப். இதைத்தாண்டி ஒவ்வொரு அணிக்கெதிராகவும், ஒவ்வொரு வீரருக்கு எதிராகவும் அவர்கள் கையாண்ட யுக்தி... இவையனைத்தையும் ஒருங்கிணைத்த கேப்டன் ஷ்ரேயாஸ்.. குறிப்பாக இந்த சீசனில் வைஷாக் விஜயகுமாரை ஷ்ரேயாஸ் பயன்படுத்தியதைச் சொல்லலாம்.

shreyas iyer scripts history for pbks

மூர்க்கம், யுக்தி, ஷ்ரேயாஸ் என இம்மூன்றும் சேர்ந்துதான், கடந்த சீசனில் 9ஆவது இடத்தில் முடித்த பஞ்சாப் அணியை நடப்பாண்டு இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றிருக்கிறது. இறுதிப்போட்டியைக் கூட 6 ரன்களில் இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிடில் ஆர்டரில் யாரேனும் ஒருவர் ஷஷாங் சிங்கிற்கு உறுதுணையாக இருந்திருந்தாலும், இந்நேரம் இறுதிப்போட்டியின் முடிவு தலைகீழாக மாறியிருக்கலாம்..

எதிரணிக்கு ஆபத்தான கேப்டன்

ஷ்ரேயாஸின் அனுபவம் மற்றும் தன்னம்பிக்கை இரண்டும் சேரும்போது எதிரணிக்கு மிகவும் ஆபத்தான கேப்டனாக மாறிவிடுகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் மும்பை இந்தியன்ஸ்... ஐபிஎல்லில் ஒவ்வொருவரும் பார்த்து பயந்த அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ்தான். ஆனால், மும்பை இந்தியன்ஸையே ஒன்றுமில்லாமல் ஆக்கியது ஷ்ரேயாஸின் பஞ்சாப் கிங்ஸ்.. அந்தப்போட்டி முடிந்து பேசிய அவர், “நான் எப்போதும் என் அணியினருக்கு ஒன்றைச் சொல்லுவேன். பெரிய சந்தர்ப்பத்தில் நீங்கள் அமைதியாக இருந்தால், நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள்”. முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி ஷ்ரேயாஸ் ஐயரின் அமைதிக்காக அவரை எம்.எஸ். தோனியுடன் ஒப்பிடுகிறார்.. இப்படி ஏகபட்ட பாராட்டுகள் அவரை வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் சேர்ந்து இந்திய டி20 அணியில் ஷ்ரேயாஸை நிரந்தர வீரராக மாற்றுமென்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது.

இதைத்தாண்டி ஒருநாள் கிரிக்கெட்டிலும் எப்போதும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர் ஷ்ரேயாஸ் ஐயர்.. நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அவரது செயல்பாடுகளைப் பார்த்தோம். ஷ்ரேயாஸின் கேப்டன்சி திறமை மற்றும் 2.0 பேட்டிங் என இரண்டும் சேரும்போது ஒருநாள் தொடரின் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..