க்ருணால் பாண்ட்யா
க்ருணால் பாண்ட்யாpt web

The most Underrated... க்ருணால் எனும் சம்பவக்காரன்.. சொல்லிவைத்து சாதித்தது எப்படி?

கிட்டத்தட்ட 2009 ஐபிஎல் ஃபைனலில் அனில் கும்ப்ளே வீசிய ஸ்பெல்லுக்கு சற்றும் சளைப்பில்லாத ஸ்பெல் க்ருணால் பாண்ட்யா வீசியது...
Published on

கும்ப்ளேவின் சாதனை பந்துவீச்சு

அனில் கும்ப்ளே
அனில் கும்ப்ளேcredit to bcci

2009 ஐபிஎல் இறுதிப்போட்டி உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். டெக்கேன் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியது. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்யும் டெக்கேன் சார்ஜர்ஸ் எவ்வளவு ரன்களைக் குவிக்கப்போகிறதோ எனும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் அந்த அணியில் இருந்தது கில்கிறிஸ்ட், ஆண்ட்ரூ சிம்மன்ஸ், ரோகித் சர்மா என அதிரடி ஆட்டக்காரர்கள். ஆனால், அந்த அணியோ 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. காரணம் ஆர்சிபியில் இருந்த சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளே. 4 ஓவர்களை வீசி 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதிலும், கில்கிறிஸ்ட், சிம்மன்ஸ், ரோகித், வேணுகோபால் ராவ் என அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாம் கும்ப்ளேவின் சுழலில் வெளியேறினர். அந்தப் போட்டியில் ஆர்சிபி தோற்றிருந்தாலும், ஆட்ட நாயகன் விருதோ அனில் கும்ப்ளேவிற்கு கொடுக்கப்பட்டது. 2025 ஐபிஎல் தொடரில் அந்த சுழலுக்கு சற்றும் குறைவில்லாத பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார் ஆர்சிபியின் க்ருணால் பாண்ட்யா..

க்ருணால் பாண்ட்யா
க்ருணால் பாண்ட்யாcredit to bcci

இலக்கு என்பதோ 191 ரன்கள்.. பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் இருக்கும் ஃபார்மிற்கு 18 ஓவர்களில் ஆட்டம் முடிந்துவிடும் என்றே எல்லோரும் நினைத்திருப்போம். ஆனால், மிடில் ஓவர்களில் பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு க்ருணால் போட்ட கடிவாளம் அந்த அணியை அடங்கி ஒடுங்கச் செய்துவிட்டது. 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கிட்டத்தட்ட அனில் கும்ப்ளே வீசிய ஸ்பெல்லுக்கு சற்றும் சளைப்பில்லாத ஸ்பெல்...

க்ருணால் பாண்ட்யா
போர்க்கதை ஆயிரம்.. இவன் பேரின்றி முடியாதே! ஸ்ரேயாஷ் தலைமையும்.. பஞ்சாப் எழுச்சியும்..

க்ருணால்...

தொடரின் ஆரம்பத்திலே, அதாவது ஐபிஎல் ஏலத்தின்போதே ஆர்சிபியின் சுழல்பந்துவீச்சு துறை விமர்சனத்திற்குள்ளானது. சுழலில் ஸ்பெஷலிஸ்ட்டான ஒருவரை ஆர்சிபி தேர்வு செய்யவில்லை; ஒருவேளை ஆர்சிபியால் இம்முறையும் கோப்பை வெல்ல முடியவில்லை என்றால் ஏலத்தில் செய்த பிழையே காரணமாக இருக்குமென்றெல்லாம் ஆருடம் சொன்னார்கள். ஆனால், ஆர்சிபி நிர்வாகம் தெளிவாக இருந்தது. க்ருணாலும், சுயாஷும் எங்களுக்கு போதும். நாங்கள் வென்று காட்டுவோம்...

க்ருணால் பாண்ட்யா
க்ருணால் பாண்ட்யாcredit to bcci

ஆர்சிபியின் சுழற்பந்து பயிற்சியாளர் மெலோலன் ரங்கராஜன் தொடரின் இடையே ஒருமுறை க்ருணால் பாண்ட்யா பந்து வீச்சு குறித்துப் பேசியிருந்தார். “2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான க்ருணால் பாண்ட்யாவின் பவுலிங் ஆக்சனைப் பார்த்திருந்தால், முற்றிலும் வேறான ஒன்றாக இருக்கும். அவர் தனது ஆக்சனில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார். இரு வருடங்களுக்கு முன் அவர் பந்தினை ரிலீஸ் செய்த விதத்திற்கும், தற்போது அவர் ரிலீஸ் செய்யும் விதத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். க்ருணால் பாண்ட்யாவின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களில் க்ருணால் பாண்ட்யாவும் ஒருவர். மேலும், நடப்பு சீசனில் ஆர்சிபி கோப்பை வெல்ல மிக முக்கியக் காரணங்களில் ஒருவர். ஏனெனில் அதிக விக்கெட்களைப் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 17 விக்கெட்களுடன் 9ஆவது இடத்திலுள்ளார். குறிப்பாக, முதல் ஆல்ரவுண்டர். 8.23 என்ற சிறந்த பந்துவீச்சு எகானமியுடன் 14 ஆவது இடத்திலுமுள்ளார்.

க்ருணால் பாண்ட்யா
பயம் ஒன்னும் சும்மா வரல! நாங்க செஞ்ச சம்பவம் அப்படி!

சம்பவக்காரன்

கிரிக்கெட் வல்லுநர்கள் எப்போதும் ஒன்றை சொல்லுவார்கள். க்ருணால் பாண்ட்யா அதிகம் பந்தினைத் திருப்ப மாட்டார். கிட்டத்தட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இணையான வேகத்துடன் பந்துவீசுவார். சுழல் பந்துவீச்சாளர்களைக் கண்டாலே ஹெல்மெட்டை கழற்றி எறிந்துவிட்டு ஸ்வீப் ஷாட்களில் பவுண்டரிகளை சேர்க்கும் பேட்ஸ்மேன்கள், க்ருணாலைக் கண்டால் ஹெல்மெட்டை அணிந்து பவ்யமாக ஆட ஆரம்பித்துவிடுவார்கள். சுழலில் பந்துவீசும்போது ஸ்வீப் ஷாட்களை தடுத்துவிட்டாலே போதும், பேட்ஸ்மேனுக்கு எதிரான போரில் பந்துவீச்சாளர் வென்றுவிடுவார். அதை அநாயாசமாக க்ருணால் செய்துவிடுவார். இந்த ஐபிஎல் முழுவதும், மொத்தமாக க்ருணால் விட்டுக்கொடுத்த ரன்கள் 379 என்றால் ஸ்வீப் ஷாட்களில் 65 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறார் க்ருணால்.

க்ருணால் பாண்ட்யா
க்ருணால் பாண்ட்யாcredit to bcci

குறிப்பாக, ஆட்டத்தின் போக்கையும், ஆடுகளத்தின் தன்மையையும் அறிந்து வேகமாகவோ அல்லது மெதுவாகவோ பந்துவீசக்கூடியவர்.. நல்ல பந்துவீச்சாளரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்பது தொடர்பாக ஹர்திக் பாண்ட்யா ஒருமுறை கூறியுள்ளார். அதாவது, குறிப்பிட்ட இடத்தில் ஒரு பந்துவீச்சாளரால் மீண்டும் மீண்டும் போட முடிந்தால் அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்பது ஹர்திக்கின் கருத்து. அப்படிப்பார்த்தால், க்ருணால் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். சூழலுக்கு ஏற்ப பந்தினை எங்கு எப்படி வீச வேண்டுமென்பது க்ருணால் பாண்ட்யாவிற்கு அத்துப்படி.

The most Underrated spinner

போட்டி முடிந்து பேசிய க்ருணால் பாண்ட்யா, “எனக்குப் கோப்பை வெல்வது பிடிக்கும் என ஆர்சிபிக்கு வந்த முதல் நாளிலேயே அவர்களிடம் சொன்னேன். பாண்ட்யா குடும்பம் 11 ஆண்டுகளில் 9 கோப்பைகளை வைத்திருக்கும் என்றுதான் ஹர்திக்கிடமும் சொல்லியிருந்தேன்.

நாங்கள் முதல் இன்னிங்ஸ் ஆடும்போது, மெதுவாக பந்துவீசினால் கண்டிப்பாக எடுபடும் என்ற உணர்வு இருந்தது. ஆனால், டி20 கிரிக்கெட்டில் அப்படிப் பந்துவீச உங்களுக்கு தைரியம் தேவை. பேட்டிங்கிற்கு சாதகமாக விக்கெட்டாக இருக்கும்போது, நீங்கள் வேகமாறுபாடுகளுடன் பந்துவீசுவது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். சூழ்ல்நிலைகளுக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொள்வது எப்போதும் எனது பலமாக இருந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். The most Underrated spinnerக்கு மேலுமொரு கோப்பை... வாழ்த்துகள்..

க்ருணால் பாண்ட்யா
இது பழைய ஆர்சிபி இல்லை! செயலுக்கேற்ற எதிர்வினை உண்டென்றால் நிச்சயம் ’ஈ சாலா கப் நம்தே’!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com