rcb vs pbks x page
T20

ஒரு ரன்னில் ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ்.. 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பஞ்சாப்!

கடந்த போட்டியைப் போல் பஞ்சாப் அணியை காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பஞ்சாப் ரசிகர்கள் நென்சில் இடியை இறக்கினார் ஸ்ரேயஸ்.

Rajakannan K

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் அதிரடியாக ஆட்டத்தை துவங்கிய பிலிப் சால்ட் 16 ரன்னில் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த ஒவ்வொரு வீரரும் 20+ ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வண்ணமே இருந்தனர். அதனால் விராட் கோலி இன்று ஆங்கர் இன்னிங்ஸ் விளையாடினார். அதனால் பந்துக்கு இணையாகவே அவர் ரன்கள் எடுத்து வந்தார்.

மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி உடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பட்டிதாரும் வந்த வேகத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இருப்பினும் அவரும் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். இதற்கிடையில் நீண்ட நேரம் களத்தில் இருந்த விராட் கோலி 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் மட்டுமே விளாசி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

கடைசி லீக் போட்டியில் பொளந்து கட்டிய ஜிதேஷ் சர்மா இந்தப் போட்டியில் வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இருப்பினும் 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி நேரத்தில் ரொமாரியோ ஷெபெர்ட் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை அர்ஸ்தீப் சிங் சிறப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. முதல் 3 ஓவர்களை மோசமாக வீசிய அர்ஸ்தீப் கடைசி ஓவரை சிறப்பாக வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். முதல் 3 ஓவர்களை சிறப்பாக வீசிய ஜேமிசன் கடைசி ஓவரை மோசமாக வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவரும் 3 விக்கெட் சாய்த்தார். வைஷாக், ஒமர்சாய் இருவரும் சிறப்பாக பந்துவீசினர்.

191 ரன்களை இலக்காக கொண்டு பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன், பிரியான்சி களமிறங்கினர். இறுதிப்போட்டி என்பதால் அழுத்தம் காரணமாக இருவரும் நிதானமாகவே விளையாடினர். அதிரடிக்கு பெயர் போன இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்றும் முயற்சியில் விளையாடியது. இருப்பினும் பிரியான்ஸ் 24 ரன்னிலும், பிரப்சிம்ரன் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து கேப்டன் ஸ்ரேயஸ் களமிறங்கினார்.

கடந்த போட்டியைப் போல் பஞ்சாப் அணியை காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பஞ்சாப் ரசிகர்கள் நென்சில் இடியை இறக்கினார் ஸ்ரேயஸ். பின்னர் களத்தில் நீண்ட நேரம் நிலைத்து விளையாடிய ஜோஸ் இங்கிலிஷ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் சிக்ஸர்களை பறக்கவிட்டார். 17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.