”நேரம் வந்துவிட்டது.. பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள்” - RCB கோப்பை வெல்லும் என ஏபிடி நம்பிக்கை!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை பிளேஆஃப் சென்ற அணிகள் பட்டியலில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு பிறகு 9 முறை தகுதிபெற்ற ஆர்சிபி அணி 2009, 2011 மற்றும் 2016 என மூன்று ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் விளையாடியது.
ஆனால் 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராகவும், 2011 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராகவும், 2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் தோல்வியுற்று இன்றுவரை (17 ஆண்டுகளாக..) கோப்பை வெல்லாத அணியாகவே ஆர்சிபி இருந்துவருகிறது.
ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான மூன்றாவது அணியாக திகழ்ந்தாலும் ஒரு கோப்பை கூட வெல்லாமல் இருந்துவரும் ஆர்சிபி அணி, 2025 ஐபிஎல் தொடரில் மூத்தவீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என ஒரு சிறந்த கலவையுடன் களம்கண்டது.
ஒவ்வொரு மேட்ச் வின்னர்கள் உருவானார்கள்..
ஆரம்பத்தில் இந்த அணியெல்லாம் பிளேஆஃப்க்கு தகுதிபெறாது, 17 வருட கோப்பை கனவு 18வது வருடமும் நீண்டு குருசாமி அணியாக தான் ஆர்சிபி வலம்வர போகிறது என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
ஆனால் எப்போதும் இல்லாத வகையில் ஓரிரு வீரர்களை மட்டுமே நம்பியில்லாமல் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு மேட்ச் வின்னர்கள் என ஆர்சிபி அணியில் வெளிப்பட்டனர். அது ஆர்சிபியை 2025 ஐபிஎல்லின் தலைசிறந்த அணியாக உருவெடுக்கவைத்தது. அதிலும் வெல்லவே முடியாத சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு வென்றது எல்லாம் ‘ஆர்சிபி ரசிகர்களே எதிர்ப்பார்க்காத தரமான சம்பவம்.
மேலும் க்ருணால் பாண்டியாவின் அசத்தலான கேமியோ, ரொமாரியோ ஷெஃபர்டின் பிரம்மிக்க வைக்கும் பேட்டிங் என எல்லாம் பக்கம் இருந்தும் ஆர்சிபி அணிக்கு சாதகமான சூழல் உருவாக ‘ஆர்சிபி கோப்பை வெல்லவேண்டும் என பிரபஞ்சமே நினைப்பதாக’ ரசிகர்கள் சிலாகித்தனர்.
நடப்பு சீசனில் மட்டும் விராட் கோலி, ரஜத் பட்டிதார், ஹசல்வுட், ரொமாரியோ ஷெபர்ட், பிலிப் சால்ட், க்ருணால் பாண்டியா, ஜிதேஷ் சர்மா மற்றும் சுயாஷ் சர்மா என 8 வெவ்வேறு ஆர்சிபி வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியுள்ளனர். இதுவே ஆர்சிபி அணி முதல் அணியாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கோப்பை வெல்வதற்கான நேரம் வந்துவிட்டது..
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், ஆர்சிபி கோப்பை வெல்வதற்கான நேரம் வந்துவிட்டதாக ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
ஆர்சிபி மற்றும் விராட் கோலி குறித்து பேசியிருக்கும் ஏபிடி வில்லியர்ஸ், “கோப்பை வெல்வதற்கான நேரம் வந்துவிட்டது. ஆர்சிபி அதற்கான முழு வீச்சில் சென்று கொண்டிருக்கிறது. எப்போதும் இல்லாத வகையில் இந்த சீசனில், ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் மட்டுமல்ல, பல வீரர்கள் மேட்ச் வின்னர்களாக முன்னேறி வருகிறார்கள். வழக்கமான விராட் கோலி அல்லது அன்றைய கிறிஸ் கெய்ல் மட்டுமல்ல. தற்போது முழு அணியும் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்படுவதை பார்க்கிறோம்.
எல்லோரும் 2016 சீசனை பற்றி பேசுகிறார்கள், ஆனால் 2011 ஐபிஎல் பட்டத்தை வெல்ல ஆர்சிபிக்கு நல்ல வாய்ப்பு இருந்ததாக நினைக்கிறேன். எல்லாம் போகட்டும் கடந்த காலத்தை மறந்துவிடுவோம். ஆர்சிபி இப்போது எங்கே? மற்றொரு இறுதிப் போட்டியில் இருக்கிறது. இது மற்ற 3 ஃபைனல்களை விடவும் மிகவும் நெருக்கமாகவும், கோப்பை வெல்ல இன்னும் சிறிய இடைவெளி மட்டுமே இருப்பதாகவும் நினைக்கிறேன்.
ஆர்சிபி அணிக்காக விராட் கோலி அனைத்தையும் கொடுக்கிறார், அவர் ரன்கள் அடிக்காதபோது கூட மற்றவீரர்களுக்காக உற்சாகத்தை கொடுக்கிறார். எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, 2025 ஐபிஎல் இறுதிப்போட்டியில் விராட் கோலி சிறந்த பங்களிப்பை கொடுக்கப்போகிறார்” என்று பேசியுள்ளார்.