SRH vs RCB
SRH vs RCB Twitter
T20

“நிம்மதியா தூங்குவேன்..” டூபிளெசி உருக்கம்! ஒரு மாதத்திற்கு பின் வென்ற RCB! சொந்த மண்ணில் சரிந்த SRH

Rishan Vengai

“என்ன... உனக்கும் காய்ச்சல் அடிக்கிறதா” என்ற 23-ஆம் புலிகேசி படத்தின் வசனத்தை போல்தான், பலம் வாய்ந்த SRH அணிக்கு எதிராக சண்டைக்கு சென்ற ஆர்சிபி அணியின் நிலைமை இருந்தது. பெங்களூருக்கே வந்து 287 ரன்களை குவித்து பொளந்துகட்டிய சன்ரைசர்ஸ் அணி, இப்போ அவங்க சொந்த மண்ணுல என்னென்ன பண்ண காத்து இருக்காங்களோ என்ற பீதியில்தான் பரபரப்பான போட்டி தொடங்கப்பட்டது.

RCB vs SRH

முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூபிளெசி, “முதல்ல பேட்டிங் பண்ணாதான 300 ரன் அடிப்பிங்க, இப்போ எப்படி அடிப்பிங்கனு பார்க்கிறோம்” என SRH அணியை முதலில் பந்துவீசுமாறு கேட்டுக்கொண்டார்.

ரஜத் பட்டிதார் அதிரடியால் 206 ரன் குவித்த் ஆர்சிபி!

பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக, மிகப்பெரிய டோட்டலை தேடிய ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதலே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் டூபிளெசி இருவரும் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி 3 ஓவர்களுக்கு 43 ரன்களை எடித்துவந்து அசத்தினர். மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்த ஆர்சிபி அணியை, ஸ்பீட் பிரேக்கர் போல டூபிளெசியை வெளியேற்றி தடுத்து நிறுத்தினார் தமிழக வீரர் நடராஜன். உடன் வில் ஜேக்ஸும் போல்டாகி வெளியேற, சன்ரைசர்ஸ் அணி தரமான கம்பேக் கொடுத்தது.

நடராஜன்

ஆனால் மூன்றாவது விக்கெட்டுக்கு களத்திற்கு வந்த ரஜத் பட்டிதார், மார்கண்டே வீசிய ஒரே ஓவரில் 4 சிக்சர்களை தொடர்ச்சியாக பறக்கவிட்டு ஆர்சிபி அணியை மீண்டும் போட்டிக்குள் வலுவாக எடுத்துவந்தார். ஒருபுறம் நிலைத்து நின்ற விராட் கோலி அரைசதமடித்து அசத்த, மறுமுனையில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய பட்டிதார் 19 பந்தில் அரைசதமடித்து மிரட்டிவிட்டார்.

விராட் கோலி

ஆனால் முக்கியமான நேரத்தில் கோலி மற்றும் பட்டிதார் இருவரும் அடுத்தடுத்து வெளியேற, அணியை மீட்டு எடுத்துவரும் பொறுப்பு க்ரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் தோள்களில் சேர்ந்தது. ஆனால் இரண்டு பவுண்டரிகளை விரட்டிய DK விரைவாகவே வெளியேற, இறுதிவரை களத்திலிருந்த காம்ரான் க்ரீன் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்களை எடுத்துவந்து அணியை ஒரு நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.

கடைசியாக வந்த Swapnil Singh ஒரு சிக்சர், பவுண்டரி என பறக்கவிட, 20 ஓவர் முடிவில் 206 ரன்களை எடுத்துவந்தது ஆர்சிபி அணி.

அசத்தலான பந்துவீச்சால் மிரட்டிய ஆர்சிபி!

எப்போதும் முதலில் பேட்டிங் செய்து 250 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றிபெறும் SRH அணி, சேஸிங்கில் எப்படி செயல்படபோகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியது.

ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆர்சிபி அணி, பவர்பிளே முடிவதற்குள்ளாகவே சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் தூண்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, க்ளாசன் மற்றும் மார்க்ரம் நான்கு பேரையும் வெளியேற்றி கலக்கிப்போட்டது.

56 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் அணி நிலைகுலைய, சிக்சர் அடித்து அதிரடியை தொடங்கிய நிதிஸ் ரெட்டியை போல்டாக்கி அனுப்பிவைத்தார் கரன் சர்மா.

85 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என சரிய, 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 சிக்சர்களை பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தார். ஆனால் அவரையும் நிலைத்து நிற்க விடாத ஆர்சிபி பவுலர்கள் விக்கெட்டை வீழ்த்திக்கொண்டே இருந்தனர்.

பாட் கம்மின்ஸ்

ஒருபுறம் நிலைத்துநின்ற ஷபாஸ் அஹமது 37 பந்துக்கு 40 ரன்கள் அடித்து ஒரு கௌரவமான டோட்டலுக்கு SRH அணியை அழைத்துச்சென்றார். 20 ஓவர் முடிவில் 171 ரன்களை மட்டுமே எட்டிய சன்ரைசர்ஸ் அணி, 35 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு தொடரில் முதல்முறையாக தோல்வியை சந்தித்தது.

ஒரு மாதத்திற்கு பின் வென்ற ஆர்சிபி!

கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் வெற்றியை பெற்ற ஆர்சிபி அணி, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஏப்ரல் 25-ஆம் தேதி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.

“என்னது ஒரு மாசம் ஆயிடுச்சா” என ஷாக் வெற்றியை பதிவுசெய்த ஆர்சிபி அணி, அடுத்த 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு உயிர்ப்புடன் இருக்கும்.

பலம் வாய்ந்த SRH அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருக்கும் ஆர்சிபி அணி, இனிவரும் போட்டிகளில் தைரியமான கிரிக்கெட்டை விளையாடும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

போட்டி முடிந்த பிறகு பேசிய ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ், “இன்று இரவு நிம்மதியாக உறங்குவேன்” என்று பெரிய வேதனைக்கு பிறகு கூறினார். “இனி இந்த சுவரு யாரை எல்லாம் காவு வாங்க போகுதோ தெரியல”