GT vs LSG Cricinfo
T20

சாய் சுதர்சன்–சுப்மன் கில் போராட்டம் வீண்.. கேட்ச்களை கோட்டைவிட்ட GT! பூரன் அதிரடியால் LSG வெற்றி!

2025 ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய லக்னோ அணி தொடர்ச்சியான 4 வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளான ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் 4 அணிகளையும் வரிசையாக தோற்கடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, அபாரமான ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது.

இந்த சூழலில் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியை எதிர்த்து களம்கண்டது சுப்மன் கில்லின் குஜராத் டைட்டன்ஸ் அணி.

120-0 | பேட்டிங்கில் மிரட்டிய சாய்-கில்!

லக்னோவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வுசெய்ய, குஜராத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இன்ஃபார்ம் வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

sai sudharsan

பெரிய சிக்ஸ் ஹிட்டிங் வீரர்கள் இல்லையென்றாலும் டைமிங்கில் மிரட்டிய இந்த ஜோடி, ஓவருக்கு ஓவர் சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்டு லக்னோ பவுலர்களுக்கு தண்ணி காட்டியது. முதல் 8 ஓவரில் பவுண்டரி சிக்சர் போகாத ஒருஓவரை கூட லக்னோ பவுலர்களால் வீசமுடியவில்லை, 9வது ஓவரை வீசவந்த திக்வேஷ் மட்டுமே பவுண்டரி கொடுக்காத முதல் ஓவரை லக்னோ அணிக்காக வீசினார்.

sai sudharsan - shubman gill

ஒருபக்கம் 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்த சாய் சுதர்சன் அரைசதமடிக்க, மறுமுனையில் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என மிரட்டிவிட்ட சுப்மன் கில்லும் அரைசதமடித்து அசத்தினார். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் மாஸ் காட்டிய இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தியது. ’அது எப்படிங்க ஒருத்தரால எல்லா மேட்ச்லயும் அடிக்க முடியும்’ என்ற ஆச்சரியத்தையே ஏற்படுத்தினார் மிஸ்டர் கன்ஸிஸ்டன்ஸியாக செயல்பட்டுவரும் சாய் சுதர்சன்.

தரமான கம்பேக் கொடுத்த லக்னோ!

எப்படியும் 200 ரன்களுக்கு மேல் டைட்டன்ஸ் அணி அடிக்கும், தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவுசெய்யும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, ’இருங்க பாய்’ மொமண்ட்டை எடுத்துவந்தார் ஆவேஷ் கான். 12 ஓவரில் 120 ரன்கள் அடித்திருந்த போது குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லை 60 ரன்னில் வெளியேற்றிய ஆவேஷ் கான் முதல் விக்கெட்டை எடுத்துவந்து கலக்கிப்போட்டார். அடுத்த ஓவரிலேயே சாய் சுதர்சனை 56 ரன்னில் ரவி பிஸ்னோய் அவுட்டாக்க ஆட்டம் கண்டது டைட்டன்ஸ் அணி.

ஆவேஷ் கான்

அதற்குபிறகு களமிறங்கிய ஒரு குஜராத் பேட்ஸ்மேனால் கூட மொமண்டமை எடுத்து செல்ல முடியவில்லை. மாறாக சிக்சர் பவுண்டரி அடிக்க போராடிய பட்லர் 14 பந்தில் 16 ரன்கள், ரூதர்ஃபோர்டு 19 பந்தில் 22 ரன்கள் என சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்த, டைட்டன்ஸ் அணியின் ரன்வேகம் பாதியாக குறைந்தது. அடுத்தடுத்து வந்த வாசிங்டன் சுந்தர் 2, ரஷித் கான் 4 மற்றும் திவேதியா 0 என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற 200, 220 என எதிர்ப்பார்க்கப்பட்ட டோட்டலானது வெறும் 180 ரன்களாக சுருண்டது.

மார்க்ரம் - பூரன் அதிரடியால் LSG வெற்றி!

181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியில் தொடக்க வீரராக மார்க்ரம் உடன் இணைந்து கேப்டன் ரிஷப் பண்ட் விளையாடினார். ஆனால் ’கண்ணாடிய திருப்புனா எப்படி ஆட்டோ ஓடும்’ என்பது போலவே ஓப்பனிங் வீரராக களமிறங்கினாலும் ரிஷப் பண்டுக்கு பேட்டில் பந்து படவே இல்லை. போதாக்குறைக்கு ரிஷப் பண்ட் கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் விக்கெட் கீப்பர் பட்லர் கோட்டைவிட்டார்.

ஆனால் மறுமுனையில் 9 பவுண்டரிகள் 1 சிக்சர் என வெளுத்துவாங்கிய எய்டன் மார்க்ரம், தனியொரு ஆளாக சம்பவம் செய்தார். 6 ஓவர்களுக்கு 60 ரன்கள் அடித்து விக்கெட்டையே இழக்காமல் லக்னோ அணி விளையாட, ரிஷப் பண்ட்டை 21 ரன்னில் வெளியேற்றி முதல் விக்கெட்டை எடுத்துவந்தார் பிரசித் கிருஷ்ணா.

markram

ஆனால் எதற்கு அந்த விக்கெட்டை எடுத்தோம் என வருத்தப்படுமளவு ஒரு அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன். 31 பந்தில் 58 ரன்கள் அடித்து மார்க்ரம் வெளியேற, 7 சிக்சர்களை நாலாபுறமும் பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய பூரன் 34 பந்தில் 61 ரன்கள் அடித்து மிரட்டிவிட்டார்.

கிட்டத்தட்ட போட்டியை முடித்துவிட்டு பூரன் வெளியேற, கடைசிவரை போராடிய குஜராத் அணி இறுதிஓவர் வரை போட்டியை எடுத்துச்சென்றது. கடைசி 6 பந்துக்கு 6 ரன்கள் என போட்டிமாற, இறுதிஓவரில் பவுண்டரி சிக்சர் என விரட்டிய ஆயுஸ் பதோனி லக்னோ அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

pooran

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்த லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

ஆட்டத்தை கையில் எடுத்துவரும் வாய்ப்புகள் வந்தபோதெல்லாம் கைக்கு வந்த கேட்ச்களை கோட்டைவிட்ட குஜராத் அணி வீரர்கள், சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில்லின் போராட்டத்தை வீணடித்தனர். தோல்விக்கு பிறகு முதலிடத்திலிருந்த டைட்டன்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது.