அழிவை நோக்கி செல்லும் சிஎஸ்கே.. 18 வருடத்தில் 4 படுமோசமான சாதனைகள்.. KKR-க்கு எதிராக படுதோல்வி!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று விளையாடின.
டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே பீல்டிங் தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்தது சென்னை அணி. ருதுராஜ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிலையில், தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் இந்தப் போட்டியில் சென்னை நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், களத்தில் நடந்ததோ வேறு கதை.
படுமோசமான ஆட்டம்.. 103-க்கு சுருண்ட சிஎஸ்கே!
சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே, ரச்சின் ரவீந்திரா இறங்கினர். இருவரும் பவர் பிளேவில் மிகவும் மந்தமாக ஆடினர். இரண்டு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். பவர் பிளேவின் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிறகு 31 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே எடுத்தது. அடுத்து யாராவது வந்து ஆட்டத்தை காப்பாற்றுவார்கள் என்று பார்த்தால் கடைசி வரை அது நடக்கவே இல்லை.
சில வாய்ப்புகள் வழக்கம் போல் கிடைத்த போதும் விஜய் சங்கர் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நீண்ட நேரமாக டொக்கு வைத்துக் கொண்டிருந்த ராகுல் திரிபாதி 22 பந்துகளை சந்தித்து 16 ரன்னில் நடையைக்கட்டினார். அடுத்து வந்த அஸ்வினும் ஒரு ரன்னில் வந்த வேகத்தில் திரும்பினார்.
ஜடேஜாவும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அவருக்கு பிறகு தோனிக்கு பதிலாக தீபக் ஹூடா வந்தார். ஆனால், அவரும் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து தோனி களத்திற்கு வந்தார். ஆட்டத்தை காப்பாற்ற முடியவில்லை என்றாலும் சில ஷாட்களையாவது அடிப்பார் என்று பார்த்தால் அவரும் ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். நூரும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்தார் ஷிவம் துபே. அவர் 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணியில் சுனில் நரைன் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். ஷர்ஷித் ரானா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ஒரு அணியில் பந்துவீசிய அனைத்து பவுலர்களும் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.
10 ஒவரில் இலக்கை எட்டிய கேகேஆர்..
104 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 10.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களை அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
வரலாற்றில் 4 படுமோசமான சாதனைகள்!
* 18 வருடத்தில் முதல்முறையாக சேப்பாக்கத்தில் மிகைக்குறைவான (103) ஸ்கோரை பதிவுசெய்தது சிஎஸ்கே
* 18 வருடத்தில் முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே
* 18 வருடத்தில் முதல்முறையாக சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது சிஎஸ்கே அணி
* 18 வருடத்தில் முதல்முறையாக வரிசையாக 5 போட்டியில் தோற்றது சிஎஸ்கே