தோனியை கேப்டனாக மாற்றினால் எல்லாம் சரியாகிவிடாது.. சிஎஸ்கே அணியின் குறைகளை அடுக்கும் உத்தப்பா!
2023 ஐபிஎல் கோப்பை வென்ற கையோடு தோனி கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகி, 2024 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் என அறிவிக்கப்பட்டது.
2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சராசரியான வெற்றி விகிதத்தை கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 7 தோல்வி 7 வெற்றி என பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்து பிளே ஆஃப்க்கு செல்லாமல் வெளியேறியது.
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் சாம் கரன், ரவி அஸ்வின் போன்ற வீரர்கள் எல்லாம் அணியில் கம்பேக் கொடுக்க, இந்த சீசன் நமக்குதான் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் 5 போட்டிகளில் வரிசையாக 4 போட்டிகளில் தோற்றிருக்கும் சிஎஸ்கே அணி ரசிகர்களாலேயே கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்த சூழலில் முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கேப்டனாக அன்கேப்டு வீரர் மகேந்திர சிங் தோனி அணியை வழிநடத்துவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனி வந்தால் மட்டும் எதுவும் சரியாகாது..
நேற்றைய டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் உத்தப்பா, “எம் எஸ் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று இருப்பது அணியின் போக்கை தானாகவே மாற்றும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் உள்ள நிறைய பிரச்சனைகளை எப்படி சரி செய்வீர்கள்? ருத்துராஜ் போன்ற ஒரு முன்னணி பேட்ஸ்மேன் தற்போது வெளியேறி இருப்பது அணிக்கு மேலும் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.
கடந்த போட்டியில் ரன்களை அடித்து கான்வே ஓரளவு நம்பிக்கை கொடுத்துள்ளார். ஆனால் ரச்சின் ரவீந்திரா முதல் போட்டிக்கு பிறகு தடுமாறிவருகிறார். ருதுராஜ்க்கு பதிலாக நீங்கள் சாம் கரனை கொண்டுவருவீர்களா? அல்லது ராகுல் திரிப்பாத்தியை நம்பர் 3-ல் விளையாட வைப்பீர்களா? அல்லது வேறுயாராவது வருவார்களா?
இவ்வளவு குழப்பங்களை கடந்து எப்படி சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்கப்போகிறது என்பது புரியவில்லை. அடுத்த போட்டியில் இந்த பிரச்னைகளை எப்படி சிஎஸ்கே சரிசெய்யப்போகிறது என்பதை பார்த்தபிறகே தெளிவுபெறும்” என்று பேசியுள்ளார்.