“பெங்களூரு என்னோட கோட்டை.. இங்க நான் தான் கிங்” - சந்திரமுகி ஆக மாறிய கே.எல்.ராகுல்.. நடந்தது என்ன?
164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது அடிக்க வேண்டிய ரன் ரேட் 10.77 ஆக இருந்தது. கேல்.எல்.ராகுல் 29 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். போட்டி கிட்டதட்ட பெங்களூரு அணியின் பக்கமே இருந்தது.
ஆனால், அதன்பிறகு ஆட்டத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்தார் கே.எல்.ராகுல். ’இதுக்கு மேல் தான் என்னுடைய ஆட்டத்தை பார்க்கப் போறீங்க’ என்று ஸ்பீட் மோட்-க்கு மாறினார். ஓவருக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் வந்தது. ஆனால், யஷ் தயாள் வீசிய 14 ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்த நிலையில் 14 ஆவது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நேரத்தில் தான் திடீர் திருப்பமாக மழை லேசாக பெய்யத் தொடங்கியது.
திடீர் மழையால் நெருங்கி வந்த சோகம்.. தவிடுபொடியாக்கிய கே.எல்.ராகுல்!
மழை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில், டெல்லி அணிக்கு 36 பந்துகளில் 65 ரன்கள் தேவையாக இருந்தது. மழையால் ஆட்டம் நின்றால் அது ஆர்சிபி அணிக்கு சாதகமாகவே சென்றிருக்கும். ஏனெனில் டிஆர்எஸ் விதிப்படி அப்பொழுது 108 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், டெல்லி 9 ரன்கள் குறைவாக எடுத்திருந்தது.
இதை சரியாக மனதில் வைத்துக் கொண்ட கே.எல்.ராகுல், ஹசல்வுட் வீசிய 15 ஆவது ஓவரில் ஆட்டத்தையே புரட்டிப்போட்டார். முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரிகளை விரட்டிய அவர், அடுத்த இரண்டு பந்துகளில் தலா இரண்டு ரன்கள் எடுத்தார். 5வது பந்தில் மற்றொரு பவுண்டரியை விளாசிய அவர் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முற்றிலுமாக டெல்லி பக்கம் கொண்டு வந்தார். அந்த ஓவரில் மட்டுமே 22 ரன்கள் எடுக்கப்பட்டது.
அடுத்த இரண்டு ஓவர்களில் மொத்தம் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார் ஸ்டப்ஸ். யஷ் தயாள் வீசிய 18வது ஓவரில் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி பறக்கவிட்டு 13 பந்துகள் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார் கே.எல்.ராகுல். 6 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 53 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார் அவர்.
வெற்றிக்குப் பின் சந்திரமுகியாக மாறிய கே.எல்.ராகுல்!
கே.எல்.ராகுல் மிகவும் ஆக்ரோஷமான வீரர் கிடையாது. தன்னுடைய வெற்றியையும், தோல்வியையும் அதீத உணர்வுகளுடன் அவர் வெளிப்படுத்துவதில்லை. ஆனால், நேற்றைய ஆட்டத்தின் முடிவில் அவர் உணர்வுகளை வெளிக்காட்டிய விதம் இது கே.எல்.ராகுல் தானா.. இப்படி சந்திரமுகியாக மாறி நிற்கிறாரே என்று அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
ஆம், ஆட்டத்தை சிக்ஸருடன் முடித்த கே.எல்.ராகுல், மைதானத்திலேயே ஆக்ரோஷமாக கத்தி ஆடுகளத்தில் வட்டம் போல் செய்துக்கட்டி கைகளால் ஏதோ சைகை செய்தார். ஆம், அது வேறொன்றுமில்லை ‘பெங்களூரு என்னோட கோட்டை.. இங்கு நான் தான் கிங்’ என்று வெளிப்படையாகவே சொன்னார். இப்படி அவரை இதுவரை யாரும் பார்த்ததே இல்லை.
1992 ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தவர் கே.எல்.ராகுல். தன்னுடைய சொந்த ஊரில் வைத்து தன்னுடைய ரசிகர்களுக்கு நேற்று விருந்து படைத்துள்ளார்.
ஐபிஎல் கேரியலில் கே.எல்.ராகுல் செய்த சாதனையும், அடைந்த அவமானமும்!
2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான கே.எல்.ராகுல், 135 போட்டிகளில் விளையாடி 4,868 ரன்கள் எடுத்துள்ளார். இது ஐபிஎல் வரலாற்றில் 10 ஆவது அதிகபட்ச ரன் சேர்ப்பு ஆகும். பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது 2020 ஆம் ஆண்டில் 14 போட்டிகளில் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை வசப்படுத்தி இருந்தார். மொத்தம் 4 சதம் மற்றும் 39 அரைசதங்கள் அடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 2013 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக தான் அறிமுகமானார் கே.எல்.ராகுல். அந்த சீசனில் அவருக்கு வாய்ப்பு பெரிதாக கிட்டவில்லை. வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர், 2014 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக ரூ.1 கோடிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். அங்கும் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. 2014-ல் 166 ரன்களும், 2015-ல் 142 ரன்களும் எடுத்த அவர், 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். அந்த ஆண்டில் 397 ரன்கள் எடுத்து அசத்தினார். காயம் காரணமாக 2017 ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை. 2018 ஆம் ஆண்டு ரூ.11 கோடிக்காக பஞ்சாப் லெவன் கிங்ஸ் அணிக்கு அவரை ஏலம் எடுத்தது. அந்த சீசனில் முதல் போட்டியிலேயே 14 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்தார். அந்த சீசனில் மொத்தம் 659 ரன்கள் குவித்தார். பின்னர், 2019-ல் 593 ரன்கள், 2020-ல் 670 ரன்கள், 2021-ல் 626-ல் ரன்கள் என ஒவ்வொரு சீசனிலும் பஞ்சாப் அணிக்காக ரன் மிஷினாக இருந்தார்.
பின்னர், 2022-ல் லக்னோ அணிக்காக கேப்டனாக ரூ.17 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அந்த அணிக்காகவும் அந்த ஆண்டில் 616 எடுத்தார். 2023 ஆம் ஆண்டு அவருக்கு சரியாக அமையவில்லை. 9 போட்டிகளில் 274 ரன்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக வெளியேறினார். 2024 ஆம் ஆண்டும் சிறப்பாக விளையாடி 520 ரன்கள் குவித்தார்.
அவமானத்துடன் வெளியேறிய கே.எல்.ராகுல்!
2024 சீசனில் மிகப்பெரிய சோதனை கே.எல்.ராகுலுக்கு நிகழ்ந்தது. அணியின் உரிமையாளர்களால் பொதுவெளியிலேயே அவமானப்படுத்தப்பட்டார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் தோல்வியை தழுவியதற்காக இது நிகழ்ந்தது. அன்று அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு பெரிய அளவில் பேசுபொருளாக இருந்தது.
பின்னர், 2025 மெகா ஏலத்தில் லக்னோ அணி கே.எல்.ராகுலை விடுவித்தது. பின்னர் அவர் டெல்லி அணிக்காக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். 2025 இல் டெல்லி அணிக்காக இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி 2 அரைசதங்கள் உட்பட 185 ரன்கள் குவித்துள்ளார். சென்னை அணிக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 77 ரன்கள் விளாசி இருந்தார்.