நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேக்கப் டபி, 40 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ரிச்சர்ட் ஹாட்லீயின் சாதனையை முறியடித்துள்ளார். டபி, ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று பார்மட்களிலும் அசத்தி, நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை அமைத்துள்ளார்.
செய்தியாளர் - சு.மாதவன்
ஜேக்கப் டபி முதன்முதலில் 2020ஆம் ஆண்டு இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் வேகப்பந்துவீச்சாளராக நியூசிலாந்து அணியில் அறிமுகமானார். முதல் போட்டிலியே 4/33 விக்கெட்களை எடுத்து ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 2021-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் இடம்பெற்ற போதிலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2019-21 ஜசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியில் இடம்பெற்ற அவருக்கு, அப்போதும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. பின்னர் 2022ஆம் ஆண்டில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானர்.
தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தனது திறமையை வெளிப்படுத்தினாலும், ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமலே இருந்துவந்தது. இந்தசூழலில் தான், 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு 2025ஆம் ஆண்டில் மூன்று பார்மட்களிலும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் கிடைத்த வாய்ப்பை பிடித்துக்கொண்ட டஃபி, 21 டி20 போட்டிகளில் 35 விக்கெட்கள் எடுத்து ஜசிசி டி20 பந்துவீச்சாளர்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து அசத்தினார். மேலும் விளையாடிய 11 ஒருநாள் போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து ஒருநாள் வடிவத்திலும் அசத்தினார்.
நான்கு ஆண்டுகள் கழித்து 2025-ல் ஆகஸ்ட் மாதம் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்க, தற்போது 40 ஆண்டுகால சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.
தற்போது நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20, ஒடிஜ மற்றும் டெஸ்ட் தொடரில் மொத்தமாக 33 விக்கெட்டுகளையும், ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்களை வீழ்த்தி எடுத்து தொடர் நாயகனாக ஜொலித்தார். இத்தொடரில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் இரண்டிலும் பிளேயர் ஆப் சீரிஸ் விருதையும் தட்டிச்சென்றார்.
நடப்பாண்டில் விளையாடிய நான்கு டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கெட்களை எடுத்தார். நடப்பாண்டான 2025-ல் டி20, ஒடிஜ மற்றும் டெஸ்ட் என மொத்தம் 36 போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்களை எடுத்து மிரட்டியுள்ளார். இதன்மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த ரிச்சர்ட் ஹாட்லீயின் (23 போட்டிகளில் 79 விக்கெட்கள்,1985) 40 ஆண்டுக்கால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார் ஜேக்கப் டஃபி.
148 ஆண்டுக்கால கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் எடுத்தவர்களில் ஜேக்கப் டபி முதலிடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் 45 போட்டிகளில் 133 விக்கெட்கள்[ 2001] எடுத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் 41 போட்டிகளில் 119 விக்கெட்கள் [1999] எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
நடப்பாண்டில் நியூசிலாந்து அணிக்காக மூன்று பார்மட்களிலும் அசத்திவரும் இவர் 2025-ல் அதிக விக்கெட்கள் எடுத்த பந்துவீச்சாளர்களில் முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக நடைபெற்ற ஜபிஎல் மினி ஏலத்தில் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஜேக்கப் டஃபியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.