ஒரே போட்டியில் ’இரட்டை சதம் + சதம்’.. முதல் நியூசிலாந்து வீரராக கான்வே சாதனை!
நியூசிலாந்தின் டெவான் கான்வே, 3வது டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் குவித்து இரட்டை சதம் அடித்து, இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து, ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரராக சாதனை படைத்தார். இதனால் நியூசிலாந்து 2-0 என தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3-1 என வென்ற நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து கைப்பற்றியது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில், முதல் போட்டி டிராவில் முடிய, இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்றது. இந்தசூழலில் 3வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெறுமா என்ற எதிர்ப்பார்ப்புடன் நடைபெற்றது.
ஆனால் 3வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் டாமினேட் செய்த நியூசிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து 2-0 என தொடரை கைப்பற்றியது.
சாதனை படைத்த டெவான் கான்வே..
பரபரப்பாக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் குவித்து இரட்டை சதம் விளாசிய டெவான் கான்வே, இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரராக சாதனை படைத்தார்.
மேலும் டெவான் கான்வே உடன் கைக்கோர்த்த மற்றொரு தொடக்க வீரரான டாம் லாதமும் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டிலும் சதமடித்த தொடக்க ஜோடியாக டாம் லாதம் மற்றும் டெவான் கான்வே இருவரும் வரலாற்று சாதனை படைத்தனர்.

