19, 20 வயது வீரர்களை 28.40 கோடிக்கு வாங்கிய CSK.. யார் அந்த 2 பேர்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026 ஐபிஎல் ஏலத்தில் 19 வயது விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மா மற்றும் 20 வயது ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீரை மொத்தமாக 28.40 கோடிக்கு வாங்கியது. இவர்கள் இருவரும் எதிர்கால சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களாக மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களின் திறமையை அடிப்படையாகக் கொண்டு, சிஎஸ்கே அணி புதிய அணியை கட்டமைக்கிறது.
2026 ஐபிஎல்லுக்கு முன்னதாக தங்களுடைய மேட்ச் வின்னிங் வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் பதிரானா இருவரையும் வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த 4 வருடத்திற்கான எதிர்கால அணியை கட்டமைக்கும் முயற்சியில் இருக்கிறது..
தோனி இல்லாதபோதும் எதிர்கால சிஎஸ்கே அணி ஜொலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் சென்னை அணி நிர்வாகம், ஆயுஸ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸை தொடர்ந்து 2 இளம்வீரர்களை 28.40 கோடி விலையில் வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
19 வயது விக்கெட் கீப்பர்
2026 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மாவை சண்டையிட்டு 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ராஜஸ்தானை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேஸ்மேனான கார்த்திக் சர்மா சமீபமாக இணையத்தில் அதிகம் ஈர்க்கப்பட்ட இளம் கிரிக்கெட் வீரராக ஜொலித்துவருகிறார். மிடில் ஆர்டரில் களமிறங்கி பெரிய சிக்சர்களை ஹிட் செய்யும் இவருடைய திறமை, முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கவனத்தை ஈர்த்தது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் 4வது இடத்தில் பேட்டிங் செய்யும் ஷர்மா, ராஜஸ்தான் அணிக்காக 11 டி20 போட்டிகளில் விளையாடி இதுவரை 27 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 316 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 164.58ஆக உள்ளது. ரஞ்சி டிராபியில் 7 சிக்சர்களுடன் 139 பந்துகளில் 100 ரன்களும் சமீபத்தில் விளாசியிருந்தார். இவர் மீது 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணியின் கண்கள் விழுந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 14.20 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
20 வயது ஆல்ரவுண்டர்..
கார்த்திக் சர்மாவை தொடர்ந்து மற்றொரு அன்கேப்டு வீரரான 20 வயது பிரசாந்த் வீரை 14.20 கோடிக்கு விலைக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த 2 அன்கேப்டு வீரர்களுக்கே மொத்தமாக 28.40 கோடியை செலவிட்டுள்ளது சென்னை அணி.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான பிரசாந்த் வீர், உத்திரபிரதேச டி20 லீக்கில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை வென்ற பிறகு சென்னை ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடரில் 155.34 ஸ்ட்ரைக் ரேட்டில் 3 அரைசதங்களுடன் 320 ரன்கள் அடித்து மிரட்டினார். முக்கியமாக அவர் அணிக்காக பல போட்டிகளை நிலைத்து நின்று முடித்துக்கொடுத்தார்.
மேலும் பந்துவீச்சில் 6.69 என்ற எகானமி உடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அவருடைய கட்டுக்கோப்பான பவுலிங் சிஎஸ்கேவில் இருக்கும் ஜடேஜாவிற்கான வெற்றிடத்தை நிரம்பும் ஒரு வீரராக பிரசாந்த் வீரை மாற்றியது. ஜடேஜாவை இடத்தை இந்த 20 வயது இளம்வீரர் பூர்த்தி செய்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதுவரை அதிகவிலைக்கு சென்ற அன்கேப்டு வீரராக 10 கோடிக்கு சென்ற ஆவேஷ் கான் நீடித்த நிலையில், இந்த 2 வீரர்களும் இன்று புதிய சாதனையை படைத்துள்ளனர்.

