Messi, Ronaldo, Neymar AI
விளையாட்டு

ஜாம்பவான்களின் கடைசி உலகக்கோப்பை.. ரொனால்டோவுக்கு இறுதிவாய்ப்பு.. எதிர்பார்ப்பில் FIFA!

FIFA உலகக்கோப்பை தொடர் கால்பந்து உலகையே கட்டியாண்ட 3 ஜாம்பவான் வீரர்களுக்கு இறுதி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Praveen Joshva L

உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்படும் மிகப்பெரும் விளையாட்டுத் தொடரான FIFA கால்பந்து உலகக்கோப்பை ஜூன் 11-ஆம் தேதி, தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு உலககோப்பையை கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் நிலையில், இந்த உலகக்கோப்பையில் பல்வேறு மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வரை உலகக்கோப்பையில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கால்பந்து உலகக்கோப்பைக்கு 4 முறை உலகக்கோப்பையை வென்ற இத்தாலி அணி தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் போன்ற அணிகளும், பலருக்குப் பெயரே தெரியாத கேப் வெர்டே, குராசோ போன்ற அணிகளும் முதல்முறையாக இந்த முறை கால்பந்து உலககோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த தொடர், கால்பந்து உலகையே கட்டியாண்ட 3 ஜாம்பவான் வீரர்களுக்கு இறுதி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 20 வருடங்களாக உலகத்தின் இரு பெரும் துருவமாக இருக்கும் 38 வயதான அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி மற்றும் 41 வயதான போர்ச்சுக்கல் அணியின் ரொனால்டோ ஆகியோருக்கு இதுவே இறுதிக்கோப்பை என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இதில் கடந்த 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதன்மூலம் மெஸ்ஸி, தனது நீண்டநாள் ஏக்கமான உலகக்கோப்பையை வென்று தனது கால்பந்து வாழ்க்கையை முழுமையாகியுள்ளார். மறுபக்கம், அனைத்து முக்கியக் கோப்பைகளையும் வென்ற ரொனால்டோவுக்கு இதுவரை வெல்லாத ஒரே முக்கியக் கோப்பையாக உலகக்கோப்பை திகழ்கிறது. இதனால் அவருக்கு அந்தக் கோப்பையை வெல்லும் ஒரே வாய்ப்பாக இந்த தொடர் இருப்பதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், மற்றொரு ஜாம்பவான் வீரரான 34 வயதான பிரேசில் அணி வீரர் நெய்மாருக்கும் இதுவே இறுதி உலகக்கோப்பை தொடராக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த 2 ஆண்டாக தொடர்ந்து பல்வேறு காயங்களில் நெய்மார் சிக்கி வருவதோடு அவரின் திறமையும் கடுமையாக சரிந்துள்ளது.

இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணியில் வினீசியஸ் ஜூனியர் (Vinícius Júnior), ரபீன்கா (Raphinha ), மார்டிநெலி (Martinelli), குன்கா (Matheus Cunha ) போன்ற உலகத்தரம் வாய்ந்த அட்டாக்கிங் வீரர்களுக்கும், இளம் வீரரான என்ரிக்குக்குமே (Endrick ) அணியில் இடம் வழங்கப்படும் என்றும், மூத்த வீரர் நெய்மாருக்கு அணியில் இடம் கிடைக்காது என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால் உலகின் மிகச்சிறந்த பயிற்சியாளரான கார்லோ அன்சிலோட்டியின் (Carlo Ancelotti ) தனிப்பட்ட விருப்பம் காரணமாக நெய்மருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், அடுத்த கால்பந்து உலகக்கோப்பையில் நெய்மருக்கு 38 வயதாகி விடும் என்பதோடு அவரின் காயம் மற்றும் திறமை இன்னும் மோசமடையவே அதிக வாய்ப்புள்ளது. இதனால் நெய்மருக்கும் இதுவே இறுதி உலகக்கோப்பை எனக் கருதப்படுகிறது.