\
ruturaj gaikwad
ruturaj gaikwadcricinfo

INDA vs SLA| சதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட்.. 60 சராசரியுடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஆதிக்கம்!

இலங்கை ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்து மிரட்டியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.
Published on
Summary

இலங்கையில் தொடங்கிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 277 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் விரைவில் இழந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரியான்ஸ் ஆர்யா அணியை நிலைநிறுத்தினர். பின்னர் கேப்டன் திலக் வர்மாவுடன் நூறு ரன் கூட்டணியால் இந்தியா ஏ வலுவான நிலையைப் பெற்றது.

இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் இன்று தொடங்கியது. ஜுன் 9ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடர் ஜூன் 17ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் இலங்கை ஏ மற்றும் இந்தியா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்த நிலையில், இலங்கை அணி பந்துவீசுவருகிறது.

இந்தியா ஏ முத்தரப்பு தொடர்
இந்தியா ஏ முத்தரப்பு தொடர்

முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யவன்ஷி 3 பவுண்டரிகளை விரட்டிய பிறகு 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேபோல ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக கலக்கிய பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 2 விக்கெட்டுகள் சரிந்தபிறகு பிரியான்ஸ் ஆர்யா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதமடித்து அசத்த, மறுமுனையில் பிரியான்ஸ் ஆர்யா 32 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார். பின்னர் கைக்கோர்த்த கேப்டன் திலக் வர்மா மற்றும் ருதுராஜ் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.

அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ருதுராஜ் 113 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திலக்வர்மா 60 ரன்களும், அடுத்துவந்த பேட்டர்கள் பங்களிப்புடன் 50 ஓவரில் 277 ரன்களை குவித்துள்ளது இந்திய அணி.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடியிருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் 59.32 சராசரியுடன் 21 சதங்கள் 19 அரைசதங்கள் என பதிவுசெய்து ஆதிக்கம் செலுத்திவருகிறார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் இடம்கிடைக்காத நிலையில், ரசிகர்கள் இந்திய தேர்வுக்குழுவை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com