2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஜடேஜா, சாம் கரன் போன்ற முக்கிய வீரர்கள் வெளியேற, சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படவிருக்கிறார். ஜடேஜாவின் பன்முக திறமைகள் இல்லாமல் சிஎஸ்கே பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பவுலிங், ஃபீல்டிங், ஃபினிஷிங் என பல பிரச்னைகள் உருவாகும்.
2025 ஐபிஎல் தொடரில் படுமோசமாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026 ஐபிஎல்லில் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.. அதற்காக அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர நினைக்கும் சிஎஸ்கே, சஞ்சு சாம்சனை அணியில் எடுத்துவர தீவிரம் காட்டிவருகிறது..
சிஎஸ்கேவிற்கு சஞ்சு சாம்சனின் தேவை இருப்பதை அறிந்துகொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜடேஜா, டெவால்ட் பிரேவிஸ், துபே, பதிரானா போன்ற வீரர்களை வர்த்தகம் செய்ய டீல் பேசிய நிலையில், சிஎஸ்கே அணி ஜடேஜா மற்றும் சாம் கரனை அனுப்ப முடிவுசெய்துள்ளது.. ராஜஸ்தானும் அதற்கு பச்சைக்கொடி காட்டியதால் வர்த்தகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது..
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 நாட்களில் வெளிவரும் என கூறப்படும் நிலையில், 2012 முதல் சென்னை அணியின் காப்பானாக இருந்துவரும் ஜடேஜா சென்னை அணியிலிருந்து வெளியேறினால் என்னென்ன பிரச்னைகளை சிஎஸ்கே சரிசெய்ய வேண்டியிருக்கும் என்ற கேள்வி அதிகமாக எழுகிறது.. ஏனென்றால் பவுலர், ஃபீல்டர் மற்றும் ஃபினிசர் என பன்முக திறமை கொண்ட ஜடேஜா அணியிலிருந்து வெளியேறினால் அது அணியில் நிறைய ஓட்டைகளை உருவாக்கும்..
இந்தசூழலில் சிஎஸ்கேவிலிருந்து ஜடேஜா வெளியேறினால் என்னென்ன சவால்களை அணி சந்திக்க நேரிடும் என்பதை இங்கே பார்க்கலாம்..
1.ஆல்ரவுண்டர் - சிஎஸ்கே அணியின் சொத்தாகவே ரவீந்திர ஜடேஜா இருந்துள்ளார். பல ஆக்சன்களில் ஜடேஜாவை சுற்றியே அணி கட்டமைக்கப்பட்டது.. ஃபீல்டர், பவுலர், பேட்டர் என சென்னை அணிக்கு பல போட்டிகளை தனியாளாக வென்றுகொடுத்துள்ளார்.. டீப்பில் அவரை போன்ற சிறந்த ஃபீல்டரை கொண்டிருக்க ஒவ்வொரு அணியும் விரும்பும்..
2.சேப்பாக்கத்தில் ஸ்பின்னர் - ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் அவர்களின் சொந்த மைதானத்தில் அதிக போட்டிகளில் விளையாடும் நிலையில், ஜடேஜா ஒருவர் மட்டுமே சேப்பாக்கத்தில் கேம் சேஞ்சராகவும், மேட்ச் வின்னராகவும் இருந்துள்ளார்.. தலைசிறந்த வீரர்களையும் சேப்பாக்கத்தில் வீழ்த்தும் வித்தை தெரிந்தவர் ஜடேஜா. அவரை போன்ற ஒரு ஸ்பின்னர் இல்லாமல் நீங்கள் நூர் அகமது மற்றும் ஷ்ரேயாஸ் கோபாலை நம்பியிருக்க வேண்டியிருக்கும்..
3. ஒருவருக்கு ஈடாக 3 வீரர்கள் - ஜடேஜா போன்ற 3 டைமென்சன் பிளேயரை வெளியேற்றிவிட்டு, அவருக்கு ஈடாக சென்னை அணி 3 வீரர்களை தேடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.. குறிப்பாக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும், சிறந்த எகானமியுடன் வீசக்கூடிய பவுலர்கள் கிடைப்பது அரிது.. ஜடேஜா பலமுறை 4/11, 3/9, 3/18, 0/13, 0/18 என பல சிறந்த ஸ்பெல்களை வீசியுள்ளார்..
4.பவர்பிளே - மிடில் ஓவரில் சிக்கல் - சிஎஸ்கே அணி பலமுறை ஜடேஜாவை கொண்டு பவுலிங்கை ஓபன் செய்துள்ளது.. சிஎஸ்கே அணியில் பவர்பிளேவிலும், மிடில் ஓவரிலும் சிறப்பாக வீசக்கூடிய ஸ்பின்னர் ஜடேஜா ஒருவர் மட்டும் தான்.. தற்போது சிஎஸ்கே அணியில் நூர் அகமது மிடில் ஓவர்களில் மட்டுமே வீசிவருகிறார்.. ஒருவேளை நீங்கள் பவர்பிளேவில் வீசுவதற்கு ஒரு ஸ்பின்னரை தேடினால், இந்தியாவில் அனுபவமிக்க இடது கை ஸ்பின்னர்கள் கிடைப்பது கடினமாகவே இருக்கும்..
5.சிறந்த ஃபினிசர் - சென்னை அணியின் சிறந்த ஃபினிசராக தோனி அறியப்பட்டாலும், கடந்த 5 ஐபிஎல் சீசன்களில் சென்னை அணியின் சிறந்த ஃபினிசராக ரவீந்திர ஜடேஜாவே இருந்துவந்துள்ளார்.. தற்போது ஃபினிசிங் செய்வதில் தோனியை தவிர அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இல்லை.. 2023 ஐபிஎல் தொடரின் ஃபைனலில் அனுபவத்தோடு ஃபினிசிங் செய்துகொடுத்த ஜடேஜாவிற்கு நிகராக யார் வருவார்கள் என்பது சந்தேகமே..
6.அணியின் சமநிலை குலையும் - அணியில் ஜடேஜா இல்லாதது அணியின் பேட்டிங் சமநிலையை நிச்சயம் பாதிக்கும்.. உங்களுக்கு டாப் ஆர்டரில் ருதுராஜ், சாம்சன் போன்ற அனுபவிக்க வீரர்கள் இருந்தாலும், மிடில் மற்றும் லோயர் ஆர்டரில் அனுபவிக்க பேட்டர்கள் இல்லாமல் போவார்கள்.. லோயர் பேட்டிங் வரிசையில் விளையாடிய ஜடேஜா, பலமுறை விக்கெட்டுகள் சரியும் போது மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து அணியை மீட்டு எடுத்துவந்துள்ளார். அவர் இல்லாதது அணியின் பேட்டிங் ஆழத்தை மறுகட்டமைப்பு செய்யவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்..
7. பியூர் பேட்ஸ்மேன் - ஃபினிசிங்கில் மட்டுமில்லாமல் பலமுறை ஜடேஜா டார்கெட் செய்வதில் மிகப்பெரிய ஆட்டத்தை ஆடியுள்ளார்.. ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக விளையாடும் ஸ்பின்னர்கள் கிடைப்பது சிஎஸ்கேவிற்கு கடினமான விசயம்.. பல போட்டிகளில் 28 பந்தில் 62 ரன்கள், 45 பந்தில் 77 ரன்கள், 29 பந்தில் அரைசதம், 34 பந்தில் அரைசதம் என அடித்து போட்டியின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார்.. ஒரே ஓவரில் 37 ரன்கள் அடித்த ஒரே சிஎஸ்கே வீரர் மற்றும் ஆல்ரவுண்ட் பர்ஃபாமன்ஸிற்காக ஆட்டநாயகன் விருதுவென்ற சிஎஸ்கே வீரர் ஜடேஜா மட்டும் தான்..
8.சொந்தமண்ணில் அனுபவமின்மை - என்னதான் சாம்சன் கேப்டன்சியில் அதிக அனுபவமிக்கவர் என்றாலும், சொந்த மண்ணான சேப்பாக்கத்தை புரிந்துகொள்ளக்கூடிய அனுபவமிக்கவர் தோனிக்குபிறகு ஜடேஜா மட்டுமே.. சேப்பாக்கத்தில் கேப்டன்சி செய்வதில் ருதுராஜ் எவ்வளவு கடினப்பட்டார் என்பதை நாம் கடந்த 2 சீசன்களில் பார்த்துள்ளோம்.. தோனியும், ஜடேஜாவும் இல்லாமல் சிஎஸ்கே அணி சொந்தமண்ணில் அனுபவமற்ற ஒரு அணியாக கடக்கவேண்டியிருக்கும்..