CSKவில் சஞ்சு சாம்சன்? முடங்கிய ஜடேஜாவின் சமூக வலைதளம்.. கேப்டனாகும் ஜெய்ஸ்வால்?
ரவீந்திர ஜடேஜாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென மறைந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 19ஆவது ஐபிஎல் தொடர் போட்டிக்கு முன்பே, இப்போதே அதுபற்றிய செய்திகள் வேகம்பிடித்து விட்டன. அதிலும், 2026 ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், எந்தெந்த வீரர்களை அணிகள் தக்கவைக்கப்போகின்றன, யாரெல்லாம் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் சமீபத்திய தலைப்புச் செய்தியாக சி.எஸ்.கே.வே உள்ளது. கடந்த 3 ஐபிஎல் சீசன்களாக தோனிக்கு மாற்றுவீரரை தேடிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்முறை ராஜஸ்தான் ராயல்ஸின் சஞ்சு சாம்சனை அணிக்குள் எடுத்துவர தீவிரம் காட்டிவருகிறது. அதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே மிகப்பெரிய வர்த்தகம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதுதான் சரியான நேரம் என சாம்சனுக்கு மாற்றாக ஜடேஜா, சாம் கரண், பதிரானா ஆகிய 3 பேரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிமாண்ட் செய்துள்ளது. இதற்கிடையே, சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு செல்லப்போகிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென மறைந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணியின் நட்சத்திர வீரராகவும் ஆல்ரவுண்டராகவும் விளங்கும் ரவீந்திர ஜடேஜா, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே அணி வெற்றிபெற முக்கியக் காரணமாக இருந்தார். மேலும், 2022 சீசனில் சில ஆட்டங்களுக்கு அவர் கேப்டனாகவும் செயல்பட்டார்.
இந்த நிலையில்தான், 2026இல் தங்களது அணியை வலுப்படுத்தும் நோக்கில் சிஎஸ்கே அணி சாம்சனை உறுதியாக இழுத்துவிட்டதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. இது, நீண்டகாலமாக அணியின் ஜடேஜாவிற்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. தவிர, சென்னை ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் ஜடேஜாவின் @royalnavghan என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இது, அவருடைய வெளியேற்றச் செய்திகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. அதேபோல், பதிரானாவின் இன்ஸ்டாகிராம் கணக்கும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய எக்ஸ் தளக் கணக்குகளும் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களுடைய எக்ஸ் தள முடக்கத்திற்குச் சரியான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை. எனினும் இதைவைத்தே, அவர்கள் இருவரும் சென்னை அணியிலிருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது என ரசிகர்கள் நம்புகின்றனர்.
ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் ரூ.18 கோடிக்கு சமமான மதிப்பைக் கொண்டுள்ளனர். இது சந்தை மதிப்பு மற்றும் நட்சத்திர அந்தஸ்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான வர்த்தகத்தின் அரிய நிகழ்வாக அமைகிறது. முன்னதாக, இதுதொடர்பாக ரவீந்திர ஜடேஜாவிடம் சென்னை அணி நிர்வாகம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு புறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் செல்லப்படும் நிலையில், அவ்வணிக்கான கேப்டன்ஷிப்பிற்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரல் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் நியமிகப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக அவ்வணியைக் கவனித்த ரியான் பராக் கூட அணியிலிருந்து கழற்றிவிடப்படலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

