விராட் கோலி 2026-ல் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் உட்பட 3 சாதனைகளை படைக்க உள்ளார்..
செய்தியாளர் - சு. மாதவன்
ஐபிஎல் 2008ஆம் ஆண்டு தொடங்கியலிருந்து தற்போது வரை ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் விராட் கோலி 267 போட்டிகளில் 8 சதங்கள் மற்றும் 63 அரைசதம் உட்பட 8661 ரன்களை குவித்துள்ளார். இந்தாண்டில் நடைபெறவிருக்கும் ஐபிஎல்லில் 339 ரன்களை எடுத்தால் ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்கள் எட்டிய முதல் வீரராக மாறி சாதனை படைப்பார்.
ரோகித் சர்மா 272 போட்டிகளில் 7046 ரன்கள் எடுத்து அதிக ஐபிஎல் ரன்கள் அடித்த வீரராக இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களில் கோலி 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
இந்திய அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான விராட் கோலி 308 போட்டிகளில் 53 சதங்கள் மற்றும் 76 அரைசதம் உட்பட 14,557 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக விளையாடிய 3 ஒருநாள் போட்டிகளில் 2 சதம், ஒரு அரைசதமடித்து சிறப்பான ஃபார்முடன் விளையாடிவருகிறார்.
2027ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடுவேன் என கூறியிருக்கும் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் 443 ரன்கள் எடுத்தால் 15000 ரன்களை கடந்த இரண்டாவது வீராக சாதனை படைப்பார். முதலிடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் 18426 ரன்கள் எடுத்துள்ளார்.
ரன் மெஷின் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கிங் கோலி, சர்வதேச போட்டிகளான டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என 3 வடிவத்திலும் 626 போட்டிகளில் 27975 ரன்களை குவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 42 ரன்கள் எடுத்தால் குமார் சங்கக்காரவின் 28016 ரன்களை முறியடித்து மூன்று வடிவங்களிலும் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரராக சாதனை படைப்பார். மேலும் குறைவான இன்னிங்ஸ் மூலம் 28000 ரன்களை கடந்த வீரராகவும் கோலி சாதனை படைக்கவிருக்கிறார்.
முதலிடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் 33,457 ரன்களை குவித்துள்ளார்.
இந்த மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 94 ரன்களை கடந்தால், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 1750 ரன்கள் சாதனையை முறியடிப்பார்.
2025ஆம் ஆண்டை பொறுத்தவரையில், விராட் கோலிக்கு 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி, அதன்பிறகு ஐபிஎல் தொடங்கி 18 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றது என கடந்த ஆண்டு சிறப்பானதாக இருந்தது. அதேபோல் இந்தாண்டும் சிறப்பாக அமையும் என்பது மாற்று கருத்தே இல்லை.