”அவர்களாக அனுப்பும் முன்; நீங்களாகவே சென்றுவிடுங்கள்..” ஆஸி வீரரை ஓய்வுபெற சொல்லும் ENG வீரர்!
ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, தனது ஃபார்மை இழந்து போராடி வரும் நிலையில், ஆஷஸ் தொடரில் 5வது டெஸ்ட்டில் ஓய்வை அறிவிக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கூறியுள்ளார். அவரது சொந்த மண்ணான சிட்னியில் ஓய்வு அறிவிப்பது சிறந்த முடிவாக இருக்கும் என கருத்து தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா, இதுவரை ஆஸ்திரேலியா அணிக்காக 87 டெஸ்ட், 40 ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 8,001 ரன்கள் எடுத்துள்ளார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற ஆஸ்திரேலியா அணியில் முக்கிய வீரராக ஜொலித்த கவாஜா, கடந்த 2 ஆண்டுகளாக தன்னுடைய ஃபார்மை நிரூபிக்க முடியாமல் போராடிவருகிறார்.
கடைசி இரண்டு ஆண்டுகளில் அவருடைய டெஸ்ட் பேட்டிங் சராசரி 25.93 மற்றும் 36.11 என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கவனம் ஈர்க்கவில்லை. 2025ஆம் ஆண்டில் அவரிடமிருந்து ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் மட்டுமே வந்துள்ளது. நடந்துவரும் ஆஷஸ் தொடரில் கூட 5 இன்னிங்ஸ்களில் வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்தசூழலில் தான் உஸ்மான் கவாஜா நடக்கவிருக்கு 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஓய்வை அறிவிக்கலாம் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
39 வயதான கவாஜா தன்னுடைய பேட்டிங் ஃபார்மை தொடர முடியாமல் தடுமாறிவரும் நிலையில், அவருடைய சொந்த மண்ணான சிட்னியில் நடைபெறவிருக்கும் ஆஷஸின் 5வது டெஸ்ட்டில் ஓய்வை அறிவிப்பது தான் அவருக்கான சரியான முடிவாக இருக்கும் என மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டனும், ஆஷஸ் வெற்றியாளருமான வாகன், ”நான் கவாஜாவிடம் பயிற்சியாளர்கள் உங்களை வேண்டாம் என முடிவெடுப்பதற்குள், நீங்களாகவே ஓய்வை அறிவித்துவிடுங்கள் என்று சொல்லுவேன். ஒருவர் நீண்டகாலமாக அணிக்காக விளையாடிவருகிறார் என்றால், அவருக்கான முடிவானது சிறந்ததாக இருக்கவேண்டும். பெருமைமிக்க ஆஷஸ் தொடரில், அதிலும் அவருடைய சொந்தமண்ணான சிட்னியில் அவர் ஓய்வை அறிவிப்பது தான் சிறந்த முடிவாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இல்லை கவாஜா தன்னுடைய இடத்திற்காக போராட தயாராக இருக்கிறார் என்றால், முடிவு எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும்” என பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது.

