இஷான் கிஷன் தனது குடும்பத்தில் ஏற்பட்ட துயரத்தையும் மீறி, 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி 54 ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார். தனது சகோதரிக்கு இந்த வெற்றியை அர்ப்பணித்த அவர், மகளிர் தினத்தில் இதை மேலும் சிறப்பாக மாற்றினார். அவரது தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற லட்சியம் இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தை கொடுத்துள்ளது. இந்தியாவின் ஃபினிசிங் வீரர் ரிங்கு சிங், இறுதிப்போட்டிக்கு முன்னதாக தன்னுடைய தந்தையை இழந்தபிறகும் அணிக்காக மீண்டும் உலகக்கோப்பைக்கு திரும்பினார். தற்போது அதேபோலவே இஷான் கிஷனின் குடும்பத்திலும் மரணம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தன்னுடைய குடும்பத்துடன் இருக்க கிஷான் விரும்பினாலும், நாட்டிற்காக விளையாட வேண்டும் என்ற முக்கிய முடிவை இஷான் கிஷன் எடுத்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதலில் இஷான் கிஷன் இடம்பெறவே இல்லை.. உள்ளூர் கிரிக்கெட்டில் தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் ரன்களை குவித்த இஷான் கிஷன், கடைசி நேரத்தில் தேர்வுக்குழுவின் கதவை உடைத்துவிட்டு உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்தார்.
இஷானின் தேர்வு பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அரைசதமாக விளாசிய அவரின் ஆட்டம் இந்தியாவின் வெற்றிக்கு அச்சாணியாக மாறியது. 2026 டி20 உலகக்கோப்பை முழுவதும் இந்திய அணியின் கேம் சேஞ்சராக மிரட்டிய இஷான் கிஷன், 317 ரன்கள் குவித்து இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்த 2வது வீரராக முடித்தார்.
இந்தசூழலில் தான் இறுதிப்போட்டி நடைபெறவிருந்த 2 நாட்களுக்கு முன்பு இஷான் கிஷனின் குடும்பத்தில் ஒருவரான கஸின் சிஸ்டர் மற்றும் மைத்துனர் இருவரும் கார் விபத்தில் உயிரிழந்த துயரச்செய்தி தெரியவந்துள்ளது. அது இஷான் கிஷனுக்கு மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது, பயிற்சியின் போதும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் கிஷன் சரியாக பயிற்சி செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. துயரத்தில் இருந்த இஷான் கிஷனை சகவீரர்கள் ஆறுதல் சொல்லி தேற்றியுள்ளனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் காரணமாக, இஷான் கிஷனின் தந்தை பிரணவ் பாண்டேவால் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியைக் காண வர முடியவில்லை. இஷான் கிஷனும் தனது குடும்பத்தினருடன் இருக்க விரும்பியுள்ளார். ஆனால், நாட்டிற்காக உலகக் கோப்பை வெல்லவேண்டிய முக்கியக் கடமை இருந்ததால், அவர் அணியுடன் இருக்க முடிவுசெய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பேசியிருக்கும் அவரது தந்தை பிரணவ் பாண்டே, "எங்களுக்கு ஒரு பெரிய துயரம் நடந்துவிட்டது. நாங்கள் அனைவரும் பெரும் சோகத்தில் உள்ளோம். இஷான் எங்களைப் பார்க்க வர விரும்பினார், ஆனால் இறுதிப் போட்டி இருந்ததால் அவராலும் வர முடியவில்லை. அவர் மிகவும் மனமுடைந்து உள்ளார்" என்று வேதனையுடன் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலகக்கோப்பை வென்றபிறகு பேசியிருக்கும் இஷான் கிஷன், “இறுதிப் போட்டிக்கு சற்று முன்புதான், என் உறவினர் சகோதரியை ஒரு கார் விபத்தில் இழந்தேன். நான் அவளுக்காக விளையாடினேன், ஹார்திக் பாயிடம் பேசினேன், அவர் அணியை முன்னேற்ற வேண்டும் என்று கூறினார். இந்த வெற்றியை நான் அவளுக்கு அர்ப்பணிக்கிறேன், இன்று மகளிர் தினம், எனவே இது அதை மேலும் சிறப்பானதாக்குகிறது" என கூறியுள்ளார்.
மிகப்பெரிய இழப்பு இருந்தபோதும் இந்திய அணிக்காக இறுதிப்போட்டியில் விளையாடி 54 ரன்கள் அடித்த இஷான் கிஷன், முக்கியமான 2 கேட்ச்களையும் பிடித்து அணியின் வெற்றிக்கு துணை நின்றார். இச்சம்பவத்தை அறிந்த ரசிகர்கள் இஷான் கிஷனை பாராட்டி வருகின்றனர்.