“Don’t declare your plans with words. Show them with your results” என்றார் அப்துல் கலாம்... “by their fruits you shall know them” என்றார் இயேசு கிறிஸ்து.. அதாவது, ‘அவர்களின் செயல்களின் மூலமாகவே அவர்களை அறிவீர்கள்’ என்றார்.. அதற்கு சமீபத்திய உதாரணம் இந்திய அணியின் இளம் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்..
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதும் சரி, அதற்கு முன்பாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டபோதும் சரி... கேப்டனைச் சுற்றியும், பயிற்சியாளர் கம்பீரைச் சுற்றியும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. SENA நாடுகளில் ஒரு சதம்கூட அடிக்காத ஒருவரை ஒரு வீரராக தேர்வு செய்யலாமே என்பதே யோசிக்க வேண்டிய விஷயம்.. அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் எப்படி கேப்டனாக்குவீர்கள்? என்று கேட்டனர். ‘தற்செயலாக உருவான முதலமைச்சர்கள், தற்செயலாக உருவான பிரதமர்களைப் போலவே, சூழ்நிலைகளின் சாத்தியங்களால் உருவான தற்செயல் கிரிக்கெட் கேப்டன்’ என கில்லை கிண்டலடித்தனர். அவர்களின் கேள்விகளிலும் விமர்சனங்களிலும் நியாயம் இருந்தது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த கில் 35.05 என்ற பேட்டிங் சராசரியை வைத்திருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஆடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சராசரியோடு ஒப்பிடுகையில் கில்லின் சராசரி மிகமிக குறைவான ஒன்று. அதுமட்டுமின்றி SENA நாடுகளில் கில்லின் சராசரி 25.70 ஆக இருந்தது. இதையும் தாண்டி இங்கிலாந்தில் கில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை. சராசரியோ மிகவும் குறைவு... எண்கள் மட்டுமே ஒருவரது இடத்தைத் தீர்மாணிக்கும் ஒரு போட்டியில், கில்லின் நம்பர்கள் அத்தனை வசீகரமானதாக இல்லை. இப்படிப்பட்ட சூழலில் கில்லிற்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்கள் நியாயமானதுதானே.
அதுமட்டுமின்றி, இங்கிலாந்தில் wobble seam பந்துவீச்சுகள் மிக நன்றாகவே எடுபடக்கூடிய ஒன்று.. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் Mohammad Asif ஆரம்பித்த ட்ரிக்.. களத்தில் பிட்சாகி காற்றில் வரும் பந்து தள்ளாடிக்கொண்டே வரும்.. அந்தப் பந்தை எதிர்த்து ஆடும் பேட்ஸ்மேன்கள் - தடுமாறி - ஆட முற்படுகையில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்துவிடுவார்கள். Mohammad Asif தொடங்கி வைத்ததை இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகப் பயன்படுத்தினார். ஸ்டூவர்ட் பிராட், முகமது அப்பாஸ், ஸ்டூவர்ட் கிளார்க் வெவ்வேறு காலக்கட்டங்களில் இத்தகைய பந்துகளை வீசி எதிரணியைத் திணறடித்துள்ளனர். இதைத்தாண்டி இங்கிலாந்தின் வானிலையும் சேர்ந்துகொண்டால் பந்துவீச்சாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். இந்த இடத்தில்தான் LOCK ஆனார் சுப்மன் கில்..
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு SENA நாடுகளில் 21 இன்னிங்ஸ்களில் ஆடியிருக்கும் கில் 8 முறை விக்கெட் கீப்பரிடமும், 5 முறை ஸ்லிப் மற்றும் கல்லியில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்திருக்கிறார். இதைக் குறிப்பிட்டுத்தான் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. ஆனால், அத்தனை விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் வெற்றியால் பதிலளித்திருக்கிறார் சுப்மன் கில்.
பேட்ஸ்மேனுக்கு கேட்ச் மிஸ், ரன் அவுட் மிஸ் என சில வாய்ப்புகள் கிடைக்கலாம். அவர் அந்த போட்டியில் சதம் கூட அடிக்கலாம். ஆனால், அவரது பேட்டிங் திறன் மதிப்பிடப்படுவது, அவர் அடித்த ரன்களில் தவறான ஷாட்களில் ஏதேனும் ரன்கள் வந்ததா? என்பதை வைத்தே. ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் கில்லின் false shot percentage என்பது 3.5% ஆக இருந்தது. முதல் போட்டியில் கில் அடித்த சதம் 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் அடிக்கப்பட்ட மிகவும் கட்டுக்கோப்பான சதம் என BBC வர்ணித்திருக்கிறது. நாம் மேலே பார்த்தோமே... sena நாடுகளில் கில் விக்கெட் கீப்பரிடமும், ஸ்லிப்பிடமும் தனது விக்கெட்டைப் பறிகொடுத்திருக்கிறார் என்று.. அதற்கான பதில்தான் மிகக் கட்டுக்கோப்பான சதம்..
சமீப காலங்களில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி என்றால் வெகுண்டு எழுந்து ஆடுபவர் ஸ்டீவ் ஸ்மித்.. இங்கிலாந்தில் மட்டும் எட்டு சதங்களை அடித்திருக்கிறார். ஆனால், அந்த சதங்களில் மிகக்குறைவான false-shot percentage என்பது 9.. இதிலிருந்தே தெரிந்திருக்கும்.. கில் ஆடிய ஆட்டம் எப்படிப்பட்டதென்று.
கில்லின் ஆட்டம் தொடர்பாகப் பேசும் ரவிசாஸ்திரி, தற்காப்பு ஆட்டத்தில் கில் பணியாற்றியுள்ளதாகத் தெரிவிக்கிறார். கடந்த முறை இங்கிலாந்துக்கு வந்தபோது கில் பந்தை விரட்டி விரட்டி அடிக்க முயன்றதாகத் தெரிவிக்கும் ரவிசாஸ்திரி, தற்போதோ பந்து பேட்டிற்கு வரும்வரை காத்திருக்கிறார் என்றும், அவர் தனது தற்காப்பு ஆட்டத்தினை நம்புகிறார் என்றும் தெரிவிக்கிறார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறார். இரு இன்னிங்ஸ்களிலும் அவரது ஷாட் தேர்வும் அவர் காட்டிய நிதனாமும் மிகச்சிறப்பாக இருந்தது. ஒருநாள் போட்டிகளின் அதிரடி, டெஸ்ட் போட்டிகளின் பொறுமை – இந்த இரண்டும் கலந்துபோன்ற அவரது ஆட்டம், அவருக்கு ரன்களைச் சேர்த்துக்கொடுத்தது.
கில்லின் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி முதல்முறையாக ஒரு போட்டியில் ஆயிரம் ரன்கள் குவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது தலைமையின் விளைவாக ஏற்பட்ட மகத்தான சாதனை எனலாம்.
சாதனைகள் இத்துடன் முடிவடைவதில்லை. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்…
உதாரணத்திற்கு,
கேப்டனாக இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர்
ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும், மற்றொரு இன்னிங்ஸில் சதமும் அடித்த ஒன்பதாவது வீரர்
ஒரே டெஸ்ட் போட்டியில் இரு சதம் அடித்த மூன்றாவது இந்திய கேப்டன்
இங்கிலாந்தில் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்கள் எடுத்த இந்திய வீரர்..
கில்லின் பேட்டிங் மற்றும் தலைமைக் குணம் இந்த தொடரில் அவரை ஒரு நம்பிக்கைக்குரிய லீடராக உயர்த்தியுள்ளது. இந்தத் தொடரில் அவரது பேட்டிங் அவர் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கு புதிய பக்கம் எதோ ஒரு போட்டியில் திறக்கும்.. அப்படி, புதிய பக்கம் ஒன்றைத் திறந்து அதில் தனது சாதனையை கில் எழுத ஆரம்பித்திருக்கிறார்.