’ஸ்டம்புகளை தகர்த்த ஆகாஷ் தீப்..’ 6 விக்கெட்டுகளை இழந்த ENG.. வெற்றிப்பாதையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது.
ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிய மூத்த வீரர்கள் இல்லாமல் சென்றிருக்கும் இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய போதும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றால் தான் தொடரை உயிர்ப்பு நிலையில் வைத்திருக்க முடியும் என களமிறங்கியிருக்கும் இந்தியா வெற்றிக்காக போராட வருகிறது.
2வது டெஸ்ட் போட்டியில் வெல்லுமா இந்தியா?
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்தது. இரட்டை சதமடித்த சுப்மன் கில் 269 ரன்கள் குவித்தார்.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி ஜேமி ஸ்மித் (184*) மற்றும் ஹாரி ப்ரூக் (158) இருவரின் சதத்தின் உதவியால் 407 ரன்கள் சேர்த்தது.அ
180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில்லின் சதமடிக்க 427/6 அடித்து டிக்ளார் செய்தது.
இந்நிலையில் 608 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் இங்கிலாந்து அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து போராடிவந்தது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப், ஜோ ரூட், பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் 3 பேரின் ஸ்டம்புகளையும் தகர்த்தெறிந்து விக்கெட்டுகளை எடுத்துவந்து அசத்தினார். ஆகாஷ் தீப் மற்றும் சிராஜ் இருவரும் சிறப்பாக பந்துவீசிவரும் நிலையில், இந்தியா வரலாற்று வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
போட்டி நடைபெறும் பர்மிங்காமில் இதுவரை இந்தியா வென்றதேயில்லை என்ற சூழலில், முதல் வெற்றியை இந்தியா பதிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்து அணி 153/6 என்ற நிலையில் பேட்டிங் செய்துவருகிறது. உணவு இடைவெளிக்கு முன்பு தன்னுடைய அற்புதமான டெலிவரியால் கேப்டன் ஸ்டோக்ஸ் விக்கெட்டை எல்பிடபிள்யூ மூலம் சாய்த்தார் வாஷிங்டன் சுந்தர்.
இனி ஸ்மித் விக்கெட்டை எடுக்க வேண்டும் இல்லையென்றால் எதிரில் இருப்பவர்களின் விக்கெட்டுகளை சாய்க்க வேண்டும். அதனால் இன்னும் சில நிமிடங்களில் இந்தியாவின் வெற்றி உறுதியாக வாய்ப்புள்ளது.