அப்ராஜித் முதல் இசக்கிமுத்து வரை | 2025 TNPL வெளிக்கொண்டு வந்த இளம் பட்டாளம்!
9-ஆவது டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருப்பூர் சாம்பியன்
9-ஆவது டி.என்.பி.எல். கிரிக்கெட் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்று விளையாடியதில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணியும், அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் ஜெயித்த அஸ்வின் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அமித் சாத்விக் 65 ரன்களும், துஷார் ரகேஷா 77 ரன்களும் எடுத்தனர். பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய திண்டுக்கல் அணியில் எந்த வீரர்களும் நிலைத்து நின்று விளையாடாததால், அந்த அணி 14.4 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து திருப்பூர் அணி, 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக சாம்பியன் ஆனது.
9 ஆட்டங்களில் 488 ரன்கள் குவித்த துஷார் ரஹேஜா
இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர் அணிக்காக விளையாடிய துஷார் ரஹேஜா, 9 ஆட்டங்களில் 488 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் நடப்புத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரரானார். மேலும் TNPL சீசனில் ஒரு வீரர் எடுத்த அதிக ரன்கள் என்ற முந்தைய சாதனையையும் துஷார் தகர்த்தார்.
கடந்த TNPL 2018 சீசனில் சீகெம் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக விளையாடிய அருண் கார்த்திக் 472 ரன்கள் எடுத்திருந்தார். எனினும், 2016ஆம் ஆண்டு TNPL போட்டி தொடங்கியதிலிருந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் பாபா அபராஜித் அதிக ரன் குவிப்பாளராக உள்ளார். அவர், இதுவரை 2,447 ரன்கள் எடுத்து, TNPL வரலாற்றில் முதலிடத்தில் உள்ளார். அவர், இந்த தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடி 412 ரன்கள் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். 297 ரன்களுடன் 5வது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார்.
அதேபோல் நடப்புத் தொடரில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீரர் சோனு யாதவ், 7 போட்டிகளில் 16 விக்கெட்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பிடித்த இசக்கிமுத்து 8 போட்டிகளில் 14 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
மூன்றாவது இடத்தில் திண்டுக்கல் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 போட்டிகளில் 13 விக்கெட்கள் எடுத்துள்ளார். எனினும், TNPL வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாய் கிஷோர் உள்ளார். அவர், இதுவரை 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.