sanju samson, jithesh sharma pt web
கிரிக்கெட்

2026 டி20 உலகக்கோப்பை| சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லை.. ஜிதேஷ் சர்மா இடம் உறுதி! காரணம் கில்?

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் இடம்பிடித்திருப்பது, 2026 டி20 உலக்க்கோப்பையில் எந்த விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பு கிடைக்கப்போவது என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

Rishan Vengai

  • ஆசியக்கோப்பையில் இடம்பிடித்த சஞ்சு, ஜிதேஷ் சர்மா

  • 2 விக்கெட் கீப்பரில் ஒருவருக்கே டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு

  • சஞ்சு சாம்சன் இடத்தை பறித்தது ஜிதேஷ் சர்மாவா? கில்லா?

இந்திய அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்களுக்கு இடையேயான மோதல் என்பது புதியதல்ல. ஏற்கனவே தினேஷ் கார்த்திக்கா? எம் எஸ் தோனியா? என்ற பெரிய மோதலில், தினேஷ் கார்த்திக்கை ஓரங்கட்டி தன்னுடைய இடத்தை பிடித்துக்கொண்டார் மகேந்திர சிங் தோனி. இந்திய அணியில் நிலையான தொடக்க வீரர்கள் ஏற்கனவே இருந்ததால் தினேஷ் கார்த்திக்கிற்கு அந்த இடம் மறுக்கப்பட்டது, மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிசிங் ரோல் இரண்டையும் தோனி பார்த்துக்கொண்டதால் மொத்தமாக கார்த்திக் அணியிலிருந்து வெளியேறினார்.

அங்கு தினேஷ் கார்த்திக்கிற்கு தோனி என்ற மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மட்டுமே வில்லனாக இருந்தார். ஆனால், சஞ்சு சாம்சனை பொறுத்தவரையில், ஜிதேஷ் சர்மா என்ற சக விக்கெட் கீப்பரை கடந்து சுப்மன் கில் டி20 அணிக்கு திரும்பியிருப்பது அவருடைய இடத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நிரந்தர இடம்பிடித்த சுப்மன் கில்லை டி20 அணியிலும் பொறுத்தியிருப்பது, அவரை 3 வடிவத்திற்கும் கேப்டனாக்கும் இந்திய குழுவின் எண்ணமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் டி20 அணியில் துணை கேப்டன் என்ற டேக் லைனோடு வரும்போது அது சஞ்சு சாம்சனின் தொடக்க வீரர் என்ற இடத்தை காலிசெய்யும் ஆயுதமாகவே மாறியுள்ளது.

சஞ்சு சாம்சன் vs ஜிதேஷ் சர்மா.. யார் சிறந்தவர்?

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சனா? ஜிதேஷ் சர்மாவா? என்ற விவாதத்திற்கு சென்றால் ஜிதேஷ் சர்மாவை விட திறமையில் சிறந்தவர் சஞ்சு சாம்சனே. சமீபமாக டி20 அணியில் தொடக்க வீரராக களம்கண்டு விளையாடிவரும் சஞ்சு சாம்சன், அடுத்தடுத்து 3 டி20 சதங்களை பதிவுசெய்து மிரட்டலான ஃபார்முடன் விளையாடி வருகிறார். டி20 என்றாலே அடிக்க மாட்டார் என்ற விமர்சனத்தை உடைத்துள்ள அவர், தற்போது நடந்துவரும் கேரளா டி20 லீக்கில் 4 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதம் என அதிரடி காட்டிவருகிறார். ஆசியக்கோப்பையில் தன் திறமையை நிரூபித்து 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற வெறியுடன் விளையாடிவருகிறார்.

ஜிதேஷ் சர்மா

ஜிதேஷ் சர்மாவை எடுத்துக்கொண்டால், அவர் உள்நாட்டு டி20 லீக் போட்டிகளில் ஃபினிசிங் ரோலில் மிரட்டலாக விளையாடிவருகிறார். 2025 ஐபிஎல் போட்டியில் பும்ரா வீசிய யார்க்கர் பந்திற்கு எதிராக அவரடித்த லாங்க் ஆன் சிக்சரே அவரை இந்திய அணிக்குள் கொண்டுவந்து சேர்த்துள்ளது. போதாக்குறைக்கு லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தனியாக 33 பந்தில் 85 ரன்கள் விளாசி 227 ரன்களை சேஸ்செய்த அவருடைய ஆட்டம் எல்லோரையும் பிரம்மிக்க வைத்தது.

சமீபத்தில் ஜிதேஷ் சர்மா குறித்து பேசியிருக்கும் தினேஷ் கார்த்திக், “ஒரு ஆட்டத்தை எப்படி முடிப்பது? அணியை எப்படி சிறந்த நிலைக்குக் கொண்டு செல்வது? ஒரு ஆட்டத்தை வெல்ல அல்லது முதல் இன்னிங்ஸில் அணியை வெகுதூரம் அழைத்துச் செல்ல தேவையான பெரிய இன்னிங்ஸை எப்படி விளையாடுவது என்பதை அவர் தற்போது கற்றுக்கொண்டுள்ளார். அவரால் தற்போது கிரவுண்ட் ஷாட்களையும் ஆட முடியும், வித்தியாசமான ஷாட்களையும் ஆடமுடியும், அவருக்குள் இருந்த திறமைதான் அவரை தற்போது ஒரு ஃபினிசிங்வீரராக மாற்றியுள்ளது” என கூறியுள்ளார்.

ஏன் சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை.. கில் எப்படி வில்லன் ஆனார்?

சஞ்சு சாம்சனின் இடம் பறிபோக சுப்மன் கில்தான் காரணம் என்ற முடிவுக்கு வருவதற்கு முன்பு, ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியை பார்த்துவிடலாம்.

2025 ஆசியக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)

பேக்கப் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்

2025 ஆசியக்கோப்பையை கடந்து 2026 டி20 உலகக்கோப்பைக்கான நிரந்த இந்திய அணியும் இந்த வீரர்களிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் இல்லாத நிலையில் டி20 அணிக்குள் வந்த அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் தொடக்க வீரர்களாக அற்புதமான சதங்களை அடித்து அணியில் தங்களுடைய இடத்தை திடமாக பிடித்துள்ளனர். தற்போது யஷஸ்வி அணிக்கு வெளியில் இருப்பதால் அபிஷேக் சர்மாவின் தலைமேல் எந்த பாரமும் இல்லை, ஆனால் சுப்மன் கில் டி20 அணிக்குள் அதுவும் துணை கேப்டனாக இடம்பிடித்திருப்பதுதான் சஞ்சு சாம்சனுக்கு மிகப்பெரிய தொல்லையாக மாறியிருக்கிறது.

துணைக்கேப்டன் அணியின் வெளியில் இருக்க வேண்டுமென்பதால் அணியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான முதல் ஆள் சஞ்சு சாம்சனாகத்தான் இருப்பார். காரணம் தொடர்ந்து அவர் தொடக்க வீரராக மட்டுமே டி20 அணியில் விளையாடி வருகிறார், அடுத்தடுத்து 3 டி20 சதங்களை அடித்தபோதும் இந்திய அணியில் அவருடைய இடம் கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. 3வது இடத்தில் சஞ்சுவை களமிறக்க முடியாது, அங்கு திலக் வர்மா அற்புதமான வீரராக தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். 4வது வீரராக கேப்டனும், 5வது வீரராக ஹர்திக் பாண்டியாவும், 6வது வீரராக ஷிவம் துபேவும் இடம்பெறவே அதிக வாய்ப்புகள் உண்டு. 7வது வீரராக அதாவது ஃபினிசிங் ரோலில் நிச்சயம் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவே களமிறங்க அதிக வாய்ப்புகள் உண்டு.

சூர்யகுமார் - சஞ்சு சாம்சன்

சமீபகாலமாக ஃபினிசிங் ரோலிற்காகவே தயாராகிவரும் ஜிதேஷ் சர்மா, 2025 ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற ஆர்சிபி அணியில் தன்னை நிரூபித்துக்காட்டிவிட்டார். போதாக்குறைக்கு ஃபினிசிங்கில் ஊறிப்போன தினேஷ் கார்த்திக் பேட்டிங் கோச்சாக அவரை மெருகேற்றியுள்ளார். 8வது வீரராக அக்சர் பட்டேல் இடம்பிடிப்பார். 9வது வீரராக வருண் சக்கரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ் இருவரில் ஒருவர் இடம்பெறுவர், அதிக வாய்ப்பு வருண் சக்கரவர்த்திக்கே கிடைக்கவும் வாய்ப்புண்டு. 10வது வீரராக அர்ஷ்தீப் சிங்கும், 11வது வீரராக ஜஸ்பிரித் பும்ராவும் இடம்பெறுவார்கள்.

இந்தியாவின் இந்த அணி நிச்சயம் டி20 உலகக்கோப்பை வெல்லக்கூடிய ஒரு வலுவான அணியாகவே அமையும். இந்திய தேர்வுக்குழுவின் இந்த எண்ணப்படி பார்த்தால் பிளேயிங் 11 இறுதிவரை அவர்களுக்கு இடது, வலது கை பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள் என நிரம்பியிருப்பார்கள், எந்த ஆடுகளத்திலும் இந்திய அணியால் ஜொலிக்க முடியும். இப்படியான ஒரு கடினமான சூழலில் சஞ்சு சாம்சன் எப்படி தன் இடத்தை சீல் செய்யப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.