மதுரையை குறிவைக்கும் கட்சிகள்.. தகிக்கும் அரசியல் களம்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக தேர்தல் களம் தகிக்கத் துவங்கியுள்ளது. அதிலும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மதுரை மண், எரிமலை அளவுக்கு உஷ்ணத்தை எட்டியுள்ளது. சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மதுரை சென்றிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மத்திய தொகுதியில் நாளை மக்களை சந்திக்கிறார். இந்த நிலையில்தான், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை துவங்கியுள்ளார்.. சமீபத்தில் மதுரை மண்ணில் விஜய் மாநாடு நடத்தி முடித்த நிலையில், அரசியல் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 2021 தேர்தலில் மதுரை தொகுதிகளின் வெற்றிநிலவரம் என்ன? எடப்பாடியின் வருகையால் அலர்ட் ஆனாரா பிடிஆர்.. மதுரை மக்கள் சொல்வதென்ன? விரிவாகப் பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது திமுக. இந்த நேரத்தில், பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்திருக்கும் அதிமுக, 2026 ஐ விட்டுவிடக்கூடாது என்று வேகம் காட்டத்தொடங்கியுள்ளது. உட்கட்சி பிரச்னை, கூட்டணி பிரச்னைகளை கடந்து, 8 மாதத்திற்கு முன்பாக இபிஎஸ் சுற்றுப்பயணத்தை தொடங்க இதுவே காரணம் என்கின்றனர் அரிசியல் ஆய்வாளர்கள். மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி, 100 தொகுதிகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார். அரசியல் களத்தில் இது கூட்டப்படும் கூட்டம்தான் என்று விமர்சனம் எழுந்தாலும், தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்து வருகிறார் எடப்பாடி. பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்றைய தினம் மதுரையில் சுற்றுப்பயத்தை தொடங்கினார். அதன்படி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் நேற்று பரப்புரை மேற்கொண்டவர், நாளைய தினம் மதுரை மத்திய தொகுதிக்கு செல்ல இருக்கிறார்.
இப்படியான நிலையில்தான், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது தொகுதிக்குட்பட்ட வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி பகுதிகளில் வீதிவீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளையும், மனுக்களையும் பெற்றிருக்கிறார். அமைச்சர் இலாகா மாற்றி கொடுக்கப்பட்ட பிறகு, பெரிய அளவில் ஆக்டிவாக இல்லாமல் ஓதுங்கி இருந்த பிடிஆர், இப்போது திடீரென களத்தில் இறங்கியிருப்பது திமுக தொண்டர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்தான். பி.டி.ஆர். எப்போதும் மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகளை கேட்டு தீர்க்கும் பழக்கம் கொண்டவர்தான் என்றாலும், எடப்பாடியின் விஜயம் நாளை இருப்பதால், இன்றே களத்திற்கு வந்தாரா என்ற கேள்வி எழுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்சி மீதும், முதல்வர் மீதும் எடப்பாடி விமர்சனக்கணையை தொடுத்து வரும் நிலையில், பிடிஆர்-ன் மூவ் கவனம் ஈர்த்திருக்கிறது.
ஒரு பக்கம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ”திமுக சார்பில் மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போட்டியிட மாட்டார்.. அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகி விலகப்போகிறார்” என்றெல்லாம் வதந்திகள் பரவி வந்தன. மதுரையை விடுத்து பெரும்பாலும் சென்னையிலேயே அவர் தங்கி இருந்ததும் வதந்திகளுக்கு வலு சேர்த்தன. இப்படியாக, எதற்கும் பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்த பிடிஆர், தற்போது திடீரென சொந்த தொகுதியில் இறங்கி தேர்தல் பணிகளை துவங்கி இருப்பதுதான் பற்பல கேள்விகளை எழுப்புகின்றன. மறுபுறம், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அதே மதுரை மத்தியில் போட்டியிடுவார் என்கின்றனர் மதுரை திமுக வட்டாரத்தினர்.
2021 சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் முடிவுகள் என்று பார்த்தால், 10 தொகுதிகளில் 5 இடங்களில் திமுக கூட்டணியும், 5 இடங்களில் அதிமுகவும் வெற்றியை பெற்றன. தொகுதி வாரியாக என்று பார்த்தால், மதுரை கிழக்கில் மூர்த்தி, மதுரை மத்தியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கில் தளபதி, சோழவந்தானில் வெங்கடேசன் மற்றும் மதுரை தெற்கில் மதிமுகவைச் சேர்ந்த பூமிநாதன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
மதுரை மேற்கில் செல்லூர் ராஜூ, மேலூரில் செல்வம், திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா, திருமங்கலத்தில் ஆர்.பி உதயகுமார் மற்றும் உசிலம்பட்டியில் ஐயப்பன் ஆகியோர் வெற்றிபெற்றனர். கடந்த தேர்தலில் ஆளுக்குப் பாதி என்று இருபெரும் திராவிட கட்சிகள் பங்குபோட்ட நிலையில், சமீபத்தில் மதுரை மண்ணில் மாநாடு நடத்திய தவெக தலைவர் விஜய், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாக ட்விஸ்ட் கொடுத்தார். மதுரை கிழக்கில் வேட்பாளர் விஜய் என்று தொடங்கி, மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் தன் பெயரையே வேட்பாளராக சொல்லி, இங்கு மட்டுமல்ல, 234லும் இந்த விஜய்தான் வேட்பாளர் என்று நினைத்து வேலை செய்யும்படி தவெகவினருக்கு அறிவுறுத்தினார்.
இப்படியாக மதுரை மண்ணில் அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. பிடிஆரின் இன்றைய செயல்பாடு குறித்து பேசும் சிலர், எடப்பாடி வருகிறார் என்ற செய்தி வெளியான உடனே பி.டி.ஆர். மக்களை சந்தித்தது சற்றே அரசியல் கணக்கோடு செய்த செயல் போல தெரிவதாக கூறுகின்றனர். அதே நேரம், பி.டி.ஆர். எப்போதும் மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகளை கேட்டு தீர்க்கும் பழக்கம் கொண்டவர். எடப்பாடி வருகையோடு இதை இணைத்துப் பார்க்க தேவையில்லை. இது அவருடைய வழக்கமான நடைமுறைதான் என்கின்றனர் மற்றொரு தரப்பினர். எப்படி இருப்பினும், இருதுருவங்களும் மாறி மாறி தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளதால், மதுரை மக்களிடையே இது பேசுபொருளாக மாறியுள்ளது. சுற்றுப்பயணத்தில், அவ்வப்போது அட்டாக் மற்றும் டிஃபென்ஸ் மோடில் பயணிக்கும் எடப்பாடி, பிடிஆரின் இன்றைய செயல்பாட்டை நிச்சயம் விமர்சித்து பேசுவார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 2026ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில், மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.