39 பந்தில் 87 ரன்கள் விளாசிய சாய் கிஷோர் pt
கிரிக்கெட்

8 சிக்சர்கள்.. ஒரே ஓவரில் 27 ரன்கள்.. சாய் கிஷோர் மிரட்டல் ஆட்டம்! 204 ரன்கள் அடித்த தமிழ்நாடு!

திரிபுரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் 223 ஸ்டிரைக்ரேட்டில் 8 சிக்சர்களுடன் 87 ரன்கள் விளாசினார் தமிழக வீரர் சாய் கிஷோர்..

Rishan Vengai

சையத் முஷ்டாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணி திரிபுராவுக்கு எதிராக 204 ரன்கள் குவித்தது. சாய் கிஷோர் 8 சிக்சர்களுடன் 87 ரன்கள் அடித்து அசத்தினார். 26/4 என்ற நிலையிலிருந்து 204/5 என முடித்தனர். ஜகதீசன் 83 ரன்கள் அடித்தார். திரிபுரா 22 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

இந்தியாவின் முதன்மை உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியின் 18வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.. சீசனின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்..

அபிஷேக் சர்மா

அந்த வகையில், அபிமன்யு ஈஸ்வரன், சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல், ஆயுஸ் மாத்ரே, அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடிவரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த வீரர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்..

தொடரின் முதலிரண்டு போட்டியில் தமிழ்நாடு தோற்ற நிலையில், 3வது போட்டியில் 8 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் உதவியுடன் 93 ரன்கள் குவித்த ராஜ்குமார் முதல் வெற்றியை தேடித்தந்தார்..

இந்தசூழலில் இன்று நடைபெற்றுவரும் 5வது லீக் போட்டியில் திரிபுராவை எதிர்கொண்டு விளையாடிவருகிறது தமிழ்நாடு.. முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவரில் 204/5 ரன்கள் குவித்துள்ளது..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் திரிபுராவிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, 26 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.. இந்தப்போட்டியிலும் தோல்வி தானா என எதிர்ப்பார்த்தபோது தான் கேப்டன் ஜகதீசனுடன் கைக்கோர்த்தார், பவுலிங் ஆல்ரவுண்டர் சாய் கிஷோர்..

இரண்டு பேரும் 5வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். 49 பந்தில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என அடித்த ஜகதீசன் 83 ரன்கள் அடித்து வெளியேறினார்.. கடைசிவரை களத்தில் நின்ற சாய் கிஷோர் 8 சிக்சர்களை பறக்கவிட்டு 39 பந்தில் 223 ஸ்டிரைக்ரேட்டுடன் 87 ரன்கள் விளாசினார். இதில் ஒரே ஓவரில் 27 ரன்களும், அதில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகளும் அடிக்கப்பட்டன..

சாய் கிஷோரின் அபாரமான ஆட்டத்தால் 26/4 என்ற நிலையிலிருந்து 204/5 என முடித்தது தமிழ்நாடு அணி.. 205 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிவரும் திரிபுரா 22 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது.. 2 ஓவரில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்..