'நிர்வாணமாக நடக்கும் ஆபத்து இனி இல்லை..' - ஜோ ரூட்டுக்கு முதல்ஆளாக வாழ்த்து சொன்ன ஹைடன்!
ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட் சதமடித்ததற்கு மேத்யூ ஹைடன் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார். ஹைடனின் 'நிர்வாணமாக நடப்பேன்' என்ற சவால் வைரலான நிலையில், ரூட் சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். ஹைடன், 'சதம் அடிக்க நீண்ட நேரம் பிடித்தது, இனி எனக்கு ஆபத்து இல்லை' என கூறிய வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் பகிர்ந்துள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13686 ரன்கள் குவித்திருக்கும் ஜோ ரூட், அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். சச்சினின் உலகசாதனையை முறியடிக்க ஜோ ரூட்டுக்கு இன்னும் 2300 ரன்கள் மட்டுமே மீதம் இருக்கின்றன..
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த வீரராக இருந்துவரும் ஜோ ரூட்டுக்கு, ஆஸ்திரேலியா மண்ணில் சொல்லிக்கொள்ளுமளவு ரன்கள் இருக்கவில்லை.. கடைசியாக நடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவருடைய பேட்டிங் சராசரி வெறும் 17ஆகவே இருந்தது.. மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் சதமடித்ததே இல்லை என்ற ரூட்டின் மோசமான சாதனையும் தொடர்ந்தது..
இந்தசூழலில் சிறந்த டெஸ்ட் வீரரான ஜோ ரூட், ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2025-26 ஆஷஸ் தொடரில் சதமடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் மைதானத்தில் நிர்வாணமாக நடப்பேன் என முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார். அவருடைய கருத்து இணையத்தில் வைரலான நிலையில், அவருடைய மகளும் ’தயவுசெய்து சதமடித்து விடுங்கள் ரூட்’ என சொன்னதும் வைரலானது..
மேத்யூ ஹைடனின் அதிர்ச்சிக்குரிய ஸ்டேட்மென்டிற்கு பிறகு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்திருக்கும் ரூட் தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.. சதமடித்த பிறகு அவர் கொடுத்த ‘இவ்வளவுதானே’ என்பதான ரியாக்சனும் இணையத்தில் வைரலாகி வருகிறது..
இந்த சூழலில் ஜோ ரூட் சதத்திற்கு பிறகு பேசியிருக்கும் மேத்யூ ஹைடன், சதமடித்த ரூட்டிற்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்..
அவர் பேசியிருக்கும் வீடியோவில், “வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவில் நீங்கள் சதம் அடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சதம் அடிக்க நீண்ட நேரம் பிடித்துவிட்டது. நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை. அதனால், மீண்டும் வாழ்த்துக்கள், நண்பா” என கூறியுள்ளார். அவருடைய வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் பகிர்ந்துள்ளது..
இங்கிலாந்து அணி முதல்நாள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 135*(202) ரன்களுடனும், ஜோப்ரா ஆச்சர் 32 (26) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

