ரஞ்சிக்கோப்பையின் பயிற்சி போட்டியில் தன்னுடைய முன்னாள் அணியான மும்பைக்கு எதிராக 181 ரன்கள் குவித்த பிரித்வி ஷா, முஷீர் கானுடன் ஏற்பட்ட தகராறில் பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2018-ம் ஆண்டு யு19 உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் முதலிய வீரர்கள் அடங்கிய இந்திய அணியை வழிநடத்திய பிரித்வி ஷா, இந்தியாவிற்கு கோப்பை வென்றுக்கொடுத்ததன் மூலம் எல்லோருடைய பார்வையையும் பெற்றார்.
சிறந்த திறமையாக பார்க்கப்பட்ட பிரித்விஷா 2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தை பெற்றார். முதல் போட்டியிலேயே சதம் விளாசிய பிர்திவி ஷா, அடுத்த சச்சினே அவர்தான் எனும் அளவுக்கு பாராட்டப்பட்டார்.
அதற்கேற்றார் போல் அடுத்தடுத்த ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் என அனைத்து வடிவங்களிலும் அறிமுகமான பிரித்வி ஷா, 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள், 1 டி20 போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து காணாமல் போனார்.
25 வயதான பிரித்வி ஷா, 2025 -26 ஆண்டுக்கான உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்காக மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்துடன் (MCA - Pune) இணைந்திருக்கிறார். முன்னதாக, மும்பை கிரிக்கெட் சங்கத்திற்காக (MCA - Mumbai) விளையாடிய அவர் ஒழுங்கீன பிரச்னைகளில் சிக்கிய நிலையில் ரஞ்சி தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
பின்னர், மும்பை கிரிக்கெட் சங்கத்தில் இருந்தே வெளியேற முடிவு செய்த அவர் வேறு அணிக்காக விளையாட தடையில்லா சான்றிதழ் கேட்டிருந்தார். இதனையடுத்து மும்பை அணி நிர்வாகமும் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருந்தது.
இந்நிலையில்தான் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்திருக்கும் பிரித்விஷா, அந்த அணிக்காக இந்தாண்டு முதல் ரஞ்சிக்கோப்பையில் விளையாடவிருக்கிறார். தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிக்காட்ட போராடிவரும் பிரித்வி ஷா, தன்னுடைய முன்னாள் அணியான மும்பை அணி வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.
மும்பை மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை பயிற்சி ஆட்டம் புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய பிரித்வி ஷா, அபாரமாக விளையாடி 220 பந்துகளில் 181 ரன்கள் அடித்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் ஆசின் குல்கர்னியுடன் இணைந்து 305 ரன்கள் பார்ட்னர்ஷிப் மிரட்டினார்.
சிறப்பாக விளையாடிய பிரித்விஷா அவுட்டான போது, அவரை கிண்டல் செய்யும் விதமாக ‘தேங்க் யூ’ என்று நக்கல் செய்துள்ளார் சர்பராஸ் கானின் சகோதரர் முஷீர் கான். ஏற்கனவே மும்பை அணியிலிருந்து வெளியேறி மகராஷ்டிரா அணிக்காக விளையாடும் பிரித்வி ஷாவால் அவர் சொன்ன தொனியை பொறுத்துகொள்ள முடியாமல் அவரை பேட்டால் அடிக்க முயன்றார்.
பின்னர் அவருடைய சட்டையை பிடித்து சண்டைக்கு செல்ல பிரித்வி ஷா முயல, பிரச்னையில் குறுக்கிட்ட களநடுவர் பிரித்வி ஷாவை அனுப்பிவைத்தார். டக்அவுட் சென்றபோதும் அங்கிருக்கும் மற்ற மும்பை வீரர்களுடன் பிரித்வி ஷா வாக்குவாதம் செய்தார்.
இந்தவீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், முஷீர் கான் சொன்ன ’தேங்க் யூ’ என்ற இரண்டு வார்த்தை தான் பிரச்னைக்கு காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. இத சொன்னதுக்கா பேட்ட தூக்கிட்டு அடிக்க போனீங்க என ரசிகர்கள் பிரித்விஷாவை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.