புறக்கணித்த மும்பை கிரிக்கெட்.. மொத்தமாக வெளியேற NOC கேட்ட பிரித்வி ஷா! இந்த அணிக்கு செல்கிறார்?
2018-ம் ஆண்டு யு19 உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் முதலிய வீரர்கள் அடங்கிய இந்திய அணியை வழிநடத்திய பிரித்வி ஷா, இந்தியாவிற்கு கோப்பை வென்றுக்கொடுத்ததன் மூலம் எல்லோருடைய பார்வையையும் பெற்றார்.
சிறந்த திறமையாக பார்க்கப்பட்ட பிரித்விஷா 2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தை பெற்றார். முதல் போட்டியிலேயே சதம் விளாசிய பிர்திவி ஷா, அடுத்த சச்சினே அவர்தான் எனும் அளவுக்கு பாராட்டப்பட்டார்.
அதற்கேற்றார் அடுத்தடுத்த ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் என அனைத்து வடிவங்களிலும் அறிமுகமான பிரித்வி ஷா, 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள், 1 டி20 போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து காணாமல் போனார்.
ஓரங்கட்டிய மும்பை அணி..
முதலில் ஊக்கமருந்து உட்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்வி ஷா 2019-ல் பிசிசிஐயால் 8 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்குபின்னர் பொதுவெளியில் அடிதடி பிரச்னை, யோ-யோ டெஸ்ட்டில் உடற்தகுதியை நிரூபிக்க முடியாமல் போனது, காயம் என பல்வேறு காரணங்களால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மொத்தமாக காணாமல் போனார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பார்த்தால், மும்பை ரஞ்சிக்கோப்பை அணியிலிருந்தும், விஜய் ஹசாரே அணியிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டார். இது அவருக்கு பேரிடியாக விழுந்த நிலையில், ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் கம்பேக் கொடுக்கலாம் என காத்திருந்தார்.
ஆனால் 2025 ஐபிஎல் ஏலத்தில் அன்சோல்டாக சென்றது பிரித்வி ஷாவிற்கு எதிர்ப்பார்க்காத பெரிய அடியாக விழுந்தது.
NOC கேட்ட பிரித்வி ஷா.. வழங்கிய மும்பை நிர்வாகம்!
மும்பை கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த பிரித்வி ஷா, மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு பிறகு வேறு அணிக்கு செல்ல முடிவெடுத்து மும்பை கிரிக்கெட்டிடம் NOC வேண்டும் என ஜுன் 23-ம் தேதியான நேற்று விண்ணப்பித்திருந்தார்.
இந்த சூழலில் பிரித்வி ஷாவின் கோரிக்கைக்கு மும்பை கிரிக்கெட் நிர்வாகமும் NOC கொடுத்துள்ளது. இதனால் பிரித்வி ஷா வேறு எந்த அணிக்கு செல்வார் என்ற குழப்பம் நீடித்த நிலையில், ருதுராஜ் தலைமையில் பிரித்வி ஷா விளையாட வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறது. அதன்படி பிரித்வி ஷா விரைவில் மகாராஷ்டிரா அணிக்கு செல்வார் என சொல்லப்படுகிறது.