”இன்னும் என்னவெல்லாம் பார்க்கணும் கடவுளே” மும்பை அணியிலிருந்தும் பிரித்வி ஷா நீக்கம்! கண்ணீர் பதிவு
அடுத்த சச்சின் என்று புகழப்பட்டவர்..
14 வயதில் ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் 546 ரன்கள் குவித்து சாதனை படைத்த பிரித்வி ஷா, 2018-ம் ஆண்டு யு19 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வழிநடத்தி கோப்பையையும் வென்றெடுத்தார்.
பின்னர் 2018-ம் ஆண்டு தன்னுடைய 19 வயதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்வதேச டெஸ்ட் அறிமுகத்தை பெற்ற பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே சதமடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்திய அணிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் ஓப்பனிங் கிரிக்கெட் வீரர் கிடைத்துவிட்டதாகவும், அடுத்த சச்சினே இவர் தான் எனவும் உலக கிரிக்கெட்டில் டாக் ஆஃப் தி ஷோவாக மாறினார் பிரித்வி ஷா. அவரிடம் அதற்கான திறமையும் குடிகொண்டிருந்தது.
ஒழுக்கமின்மை, உடற்தகுதியில் தோல்வி..
சிறந்த திறமையான இளம்வீரராக இருந்த பிரித்வி ஷா 2018-ல் டெஸ்ட் அறிமுகம், 2020-ல் ஒருநாள் அறிமுகம் மற்றும் 2021-ல் டி20 அறிமுகம் என பெற்று தவிர்க்கவே முடியாத வீரராக மாறினார். ஆனால் 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள், 1 டி20 போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து காணாமல் போனார்.
முதலில் ஊக்கமருந்து உட்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்வி ஷா 2019-ல் பிசிசிஐயால் 8 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் இருமல் சிரப் உட்கொண்டதால் மட்டுமே அந்த பிரச்னை என பிரித்வி ஷா விளக்கமளித்தார். பின்னர் பொதுவெளியில் அதிடி பிரச்னை, யோ-யோ டெஸ்ட்டில் உடற்தகுதியை நிரூபிக்க முடியாமல் போனது, காயம் என பல்வேறு காரணங்களால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து காணாமல் போனார் பிரித்வி ஷா.
கடைசியாக 2021-ல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், இந்தாண்டு மும்பை ரஞ்சிக்கோப்பை அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஐபிஎல்லில் கம்பேக் கொடுத்து திறமையை நிரூபிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 2025 ஐபிஎல் ஏலத்தில் அன்சோல்டாக சென்றது பெரிய அடியாக பிரித்விஷாவிற்கு விழுந்துள்ளது.
மும்பை அணியிலிருந்தும் நீக்கம்..
2024 சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய பிரித்வி ஷா, காலிறுதிப்போட்டியில் 222 ரன்கள் ரன் சேஸிங்கில் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 49 ரன்கள் அடித்து மும்பை இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். ஆனாலும் தற்போது விஜய் ஹசாரே தொடருக்கான மும்பை அணியிலிருந்து பிரித்வி ஷாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
2024-2025 விஜய் ஹசாரே கோப்பை தொடரானது டிசம்பர் 21 முதல் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 18ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இதற்கான மும்பை அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிர்திவிஷாவின் பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் விரக்தியடைந்திருக்கும் பிரித்வி ஷா எமோசனலான பதிவொன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில் லிஸ்ட் ஏ போட்டிகளில் அவருடைய 55 சராசரியை குறிப்பிட்டிருக்கும் பிரித்வி ஷா, “நான் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும் கூறுங்கள் கடவுளே.. லிஸ்ட் ஏ போட்டிகளில் 65 இன்னிங்ஸில், 55.7 சராசரி 126 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3399 ரன்கள் எடுத்திருக்கும் நான் போதுமானவன் இல்லையா? ஆனால் நான் உங்கள் மீது இன்னும் நம்பிக்கை வைக்கிறேன். மக்கள் இன்னும் என்னை நம்புகிறார்கள். நான் நிச்சயமாக திரும்பி வருவேன்.. ஓம் சாய் ராம்” என்று எமோசனலாக பதிவிட்டுள்ளார்.
மும்பை விஜய் ஹசாரே டிராபி அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஆயுஷ் மத்ரே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஜெய் பிஸ்தா, சித்தேஷ் லாட், ஹர்திக் தாமோர், பிரசாத் பவார், அதர்வா அன்கோலேகர், தனுஷ் தாகியஸ், ஷர்துல் தாகியன் , ஜுனேட் கான், ஹர்ஷ் தன்னா, விநாயக் போயர்.