பிரித்வி ஷா pt web
கிரிக்கெட்

மீண்டும் தொடங்கும் பயணம்.. புதிய பாதையில் பிரித்வி ஷா!

25 வயதான பிரித்வி ஷா, மும்பை கிரிக்கெட் சங்கத்தை விட்டு வெளியேறி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துடன் 2025-26 உள்ளூர் சீசனுக்காக இணைந்துள்ளார். இது அவரது கேரியரில் புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

Sports Desk

25 வயதான பிரித்வி ஷா, 2025 -26 ஆண்டுக்கான உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்காக மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்துடன் (MCA - Pune) இணைந்திருக்கிறார். முன்னதாக, மும்பை கிரிக்கெட் சங்கத்திற்காக (MCA - Mumbai) விளையாடிய அவர் ஒழுங்கீன பிரச்னைகளில் சிக்கிய நிலையில் ரஞ்சி தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். பின், மும்பை கிரிக்கெட் சங்கத்தில் இருந்தே வெளியேற முடிவு செய்த அவர் வேறு அணிக்காக விளையாட தடையில்லா சான்றிதழ் கேட்டிருந்தார். இதனையடுத்து மும்பை அணி நிர்வாகமும் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துடன் பிரித்விஷா இணைந்திருக்கிறார்.

இது குறித்து பேசியிருக்கும் அவர், “எனது கேரியரில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துடன் இணைவது ஒரு கிரிக்கெட் வீரராக நான் மேலும் வளர உதவுமென்று நினைக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக என்னக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்கும், தந்த ஆதரவுக்கும் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.

நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும்

இதுபோன்ற ஒரு முற்போக்கான அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு கிரிக்கெட் வீரராக எனது பயணத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மாநிலம் முழுவதும் கிரிக்கெட் உள்கட்டமைப்பை மேம்படுத்த மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மகாராஷ்டிரா பிரீமியர் லீக், மகளிர் MPL, கார்ப்பரேட் ஷீல்ட் மற்றும் D.B. தியோதர் போட்டி போன்ற முயற்சிகள் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகும். இதுபோன்ற முற்போக்கான அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு கிரிக்கெட் வீரராக எனது பயணத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மகாராஷ்டிரா அணியில் ருதுராஜ் கெய்க்வாட், அங்கித் பாவ்னே, ராகுல் திரிபாதி, ரஜ்னீஷ் குர்பானி மற்றும் முகேஷ் சவுத்ரி போன்ற திறமையான வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரோகித் பவார் பிரித்வி ஷா இணைந்தது குறித்துப் பேசுகையில், “பிருத்வி ஷாவைப் போன்ற ஒரு வீரரை மகாராஷ்டிரா அணிக்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஷாவின் சர்வதேச மற்றும் ஐபிஎல் அனுபவம், குறிப்பாக அணியில் உள்ள இளைய வீரர்களுக்கு வழிகாட்டுவதற்கு விலைமதிப்பற்றதாக இருக்கும். மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், பிருத்வியின் புதிய பயணத்தில் அவருக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆட்டநாயகன்

டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று பிரிவிலும் இந்திய அணிக்காக ஆடியிருக்கும் பிரித்வி ஷாவைப் பார்த்து எதிரணியினர் பயந்து நடுங்கிய காலம் இருந்தது. ஐபிஎல் பவர்ப்ளேக்களில் அவர் காட்டும் ஆக்ரோஷம் இந்திய அணியின் அடுத்த சேவாக், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ற புகழைப் பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமின்றி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பையை இந்திய அணி அவரது தலைமையின் கீழ்தான் வென்றது.

இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் பிரித்வி ஷா 2 அரைசதம் மற்றும் 1 சதம் உட்பட 339 ரன்களை எடுத்திருக்கிறார். 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 189 ரன்களை அடித்திருக்கிறார். 58 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 4556 ரன்களையும், 65 லிஸ்ட் ஏ கிர்க்கெட்டில் ஆடி 3399 ரன்களையும் குவித்திருக்கிறார்.