ம.பி. | மருத்துவரின் மனைவிக்கு ரேபிஸ் தடுப்பூசி போட மறுத்த மருத்துவர்.. சஸ்பெண்ட் செய்த அரசு!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல கபடி வீரரான பிரிஜேஷ் சோலங்கி என்பவர், கால்வாயில் விழுந்த நாய்க்குட்டியைக் காப்பாற்றினார். ஆனால், அது கடித்ததை அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், அடுத்த சில நாட்களில் இறந்துபோனார். இது, மாநிலத்தில் பெரிய அளவில் பேசுபொருளானது.
இதையடுத்து சுகாதாரத் துறை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரேபீஸ் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச மருத்துவர் ஒருவரின் மனைவிக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போட மறுத்த மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்திலிருந்து 38 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுலா நகரமான மண்டுவில்தான், இந்த சம்பவம் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அந்த நகரத்திற்கு வதோதராவைச் சேர்ந்த டாக்டர் தாஸ் மற்றும் அவரது மனைவி சுஷ்மிதா தாஸ் (60) ஆகியோர் சுற்றுலா சென்றிருந்தனர், அப்போது தெரு நாய் ஒன்று, சுஷ்மிதா தாஸின் காலைக் கடித்துள்ளது. இதையடுத்து, ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்காக அத்தம்பதியினர் உள்ளூர் சுகாதார நிலையத்தை அணுகியுள்ளனர். ஆனால் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், அவருக்கு தடுப்பூசி போடாமல் அவரை தொலைதூர சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறிப்பாக, அவரைப் பரிசோதனை செய்யக்கூட இல்லை எனக் கூறப்படுகிறது. இறுதியில் சுஷ்மிதா தாஸுக்கு மண்டு சுகாதார மையத்தில் ஊசி போடப்பட்டுள்ளது. இதுகுறித்த வேதனையை டாக்டர் தாஸ் பதிவு செய்த நிலையில், அது, தார் மாவட்ட ஆட்சியர் பிரியங்க் மிஸ்ராவின் கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இந்தூரைச் சேர்ந்த ஒரு குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் தவறு நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டு டாக்டர் சாந்தினி டப்ரோலியா சுகாதாரத் துறையால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரியங் மிஸ்ரா, “எந்தவொரு அரசு நிறுவனமும், அது மருத்துவமனை, கல்லூரி, பள்ளி, சேவை மையம் அல்லது அலுவலகம் என எதுவாக இருந்தாலும், சேவை தேடும் ஒவ்வொரு குடிமகனையும் மரியாதையுடன் நடத்த வேண்டும். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேவையான சேவையை வழங்க வேண்டும். மருத்துவரின் நடத்தை பொருத்தமற்றது. அவரது நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது ஆரம்ப விசாரணையின் அடிப்படையில் இடைநீக்கம் செய்யப்படுவதற்கு வழிவகுத்தது” எனத் தெரிவித்துள்ளார்.