மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு ராமர் வேடமா? ரன்பீர் மீது தொடரும் தாக்குதல்... ஆதரவளித்த சின்மயி!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம், 'ராமாயணா - தி இன்ட்ரோடக்ஷன்' என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ரூ. 835 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தநிலையில், முதல் பாகத்தை 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போதும், இரண்டாம் பாகத்தை 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போதும் வெளியிட இருக்கிறார்கள்.
நடிகர் ரன்பீர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், கேஜிஎஃப் பட நடிகர் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர். இதற்கு ஏர் ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசை கலைஞர் ஹான்ஸ் ஸிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானநிலையில், ராமர் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ரன்பீர் மீது கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது.
மாட்டுக்கறி சாப்பிடுபவர் ராமராக நடிப்பதா என அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் இந்துத்துவ அமைப்பினர் சிலர். நடிகர் ரன்பீர் மீது தொடர்ந்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுவரும் நிலையில், இவருக்கு ஆதரவாக பாடகி சின்மை கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர்,
" இந்த நாட்டில் கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்த ஒரு பாபாஜி ஓட்டுக்காக ஜாமினில் வெளிவர முடியும். ஆனால் ஒருவர் சாப்பிடும் உணவு தான் இவர்களுக்கு பெரிய பிரச்சனையாக தெரிகிறது" என்று ரன்பீருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ராமாயணம் படத்தில் சாய் பல்லவி நாயகியாக தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் மீது இந்துத்துவ அமைப்புகள் சைபர் தாக்குதல் நடத்தினர். அவர் படப்பிடிப்பின் போது அசைவ உணவு சாப்பிடுவதாக கூறி அவரை விமர்சித்தனர். இந்நிலையில், தற்போது நடிகர் ரன்பீர் மீதும் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.