prabath jayasuriya 11th test fifer web
கிரிக்கெட்

10 டெஸ்ட்டில் 9 முறை 5 விக்கெட்டுகள்.. ஆஸிக்கு எதிராக மிரட்டிய பிரபாத் ஜெயசூர்யா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா.

Rishan Vengai

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

smith - khawaja - inglis

இலங்கையின் காலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், உஸ்மான் கவாஜா 232 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்கள் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் 102 ரன்கள் என மூன்று ஆஸ்திரேலியா வீரர்கள் சதமடித்து அசத்த 654/6 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா அணி, இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்னில் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

தொடர்ச்சியாக 2  சதங்கள் விளாசிய ஸ்மித்..

பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 257 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவின் குஹ்னேமன், நாதன் லயன் மற்றும் ஸ்டார்க் மூன்றுபேரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இலங்கையில் அதிகபட்சமாக சண்டிமால் 74, குசால் மெண்டீஸ் 85 ரன்கள் அடித்தனர்.

இலங்கையை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதல் போட்டியை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சதமடித்து அசத்தினார். உடன் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் சதமடிக்க, ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களுடன் இரண்டாவது நாளை முடித்தது.

வலுவான நிலையில் 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணிக்கு இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா அதிர்ச்சி கொடுத்தார். 330 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என தொடர்ந்த ஆஸ்திரேலியா பிரபாத் ஜெயசூர்யாவின் அபாரமான பந்துவீச்சால் அடுத்த 84 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.

5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரபாத் ஜெயசூர்யா 11வது டெஸ்ட் ஃபைஃபெரை கைப்பற்றி அசத்தினார்.

10 போட்டியில் 9வது 5 விக்கெட்டுகள்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதை தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 போட்டிகளில் விளையாடி 11வது டெஸ்ட் ஃபைஃபெரை கைப்பற்றி அசத்தினார் பிரபாத் ஜெயசூர்யா.

அதுமட்டுமில்லாமல் காலி மைதானத்தில் விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 9வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் பிரபாத் ஜெயசூர்யா.

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி வரும் இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 198/6 என்ற நிலையில் விளையாடிவருகிறது. இரண்டாவது இன்னிங்ஸிலும் குஹ்னேமன், நாதன் லயன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திவருகின்றனர். இலங்கை 41 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.