5 டெஸ்ட்டில் 4வது சதம்.. ஆசிய மண்ணில் பிரமாண்ட சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்! 257-க்கு சுருண்ட இலங்கை!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இலங்கையின் காலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், உஸ்மான் கவாஜா 232 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்கள் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் 102 ரன்கள் என மூன்று ஆஸ்திரேலியா வீரர்கள் சதமடித்து அசத்த 654/6 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா அணி, இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்னில் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சதமடித்து அசத்தியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
தொடர்ந்து 2வது சதம் விளாசிய ஸ்மித்..
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. முதல் போட்டியை போலவே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். குஹ்னேமன், நாதன் லயன் மற்றும் ஸ்டார்க் மூன்றுபேரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்த இலங்கை அணி 257 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக சண்டிமால் 74, குசால் மெண்டீஸ் 85 ரன்கள் அடித்தனர்.
இலங்கையை தொடர்ந்து விளையாடிவரும் ஆஸ்திரேலியா அணியில், டிராவிஸ் ஹெட் 21, கவாஜா 36, லபுசனே 4 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார். ஆனால் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் சதமடித்து அசத்தினார்.
இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் ஸ்மித் 120 ரன்கள், அலெக்ஸ் கேரி 139 ரன்களுடன் களத்தில் நீடிக்கின்றனர். 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களுடன் ஆஸ்திரேலியா விளையாடிவருகிறது.
ஆசிய மண்ணில் படைத்த சாதனை..
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 35வது சதத்தை பதிவுசெய்த ஸ்மித், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 36வது சதத்தை அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் குறிப்பிட்ட சில சாதனைகளை படைத்துள்ளார் ஸ்மித்.
ஸ்டீவ் ஸ்மித் படைத்த சாதனைகள்:
*ஆசிய மண்ணில் அதிக ரன்கள் - ஆசிய மண்ணில் அதிக ரன்கள் (1889) அடித்திருந்த ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்துள்ளார் ஸ்மித்.
* டிராவிட், ரூட் சதங்கள் சமன் - 36 டெஸ்ட் சதங்கள் அடித்து, ஜோ ரூட், டிராவிட் சாதனையை சமன்செய்து, பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளார்.
* 2வது இடம் - சமகால கிரிக்கெட்டர்களில் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில், ஜோ ரூட்டுக்கு (12972 ரன்கள்) பிறகு 10260 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார் ஸ்மித்.
* 4 சதங்கள் - கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களை அடித்துள்ளார்.