”பும்ரா இருந்தாலும் இந்திய அணியை வீழ்த்துவோம்; கவலைப்பட வேண்டியது இந்தியா தான்” – பாக். பயிற்சியாளர்
சாம்பியன்ஸ் டிராபி அணியை பொறுத்தவரையில் மற்ற ஐசிசி தொடர்களை போல நிறைய அணிகள் பங்குபெறும் தொடர் கிடையாது. ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தரமான தொடராகும்.
அதனால் தான் சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டிக்கு சமமானது என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் ஒரு போட்டியில் தோற்றால் கூட எந்த வலிமையான அணியால் கூட தொடரிலிருந்து வெளியேறிவிட முடியும்.
இந்நிலையில் இந்திய அணியின் மிகப்பெரிய பலமான ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஏற்பட்டிருக்கும் முதுகு காயமானது, சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் இந்தியாவின் கனவிற்கு பெரிய தடையாக இருக்கப்போகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட போது, தற்போது அவர் சாம்பியன்ஸ் டிராபிக்காவது வருவாரா என்ற கவலை உருவாகியுள்ளது.
பும்ராவை பற்றிய கவலை இந்தியாவுக்கு மட்டும்தான்..
ஜஸ்பிரித் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க வாய்ப்பே இல்லை என்ற கருத்தே பெரும்பாலானதாக இருந்துவருகிறது. இந்த சூழலில் பும்ராவின் உடற்தகுதியான இந்தியாவுக்கு தான் கவலையே தவிர, பாகிஸ்தான் அணிக்கு இல்லை என்றும், பும்ரா இந்திய அணியில் இருந்தாலும் இல்லையென்றாலும் எங்களால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் அகிப் ஜாவேத் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “இந்திய அணி பும்ராவின் பிட்னஸ் பற்றி கவலைப்படுவார்கள். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்த வரை மிகவும் அழகான விஷயம் என்னவெனில் நீங்கள் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஏனெனில் உலகின் டாப் 8 அணிகள் மட்டுமே அதில் விளையாடும். அதில் பும்ரா போன்ற பவுலரை கொண்டிருந்தால் அது எந்த அணிக்கும் போனஸ் பாயிண்ட் போல இருக்கும். ஆனால் அதற்காக அவரைச் சுற்றி மட்டுமே நாங்கள் அனைத்து திட்டங்களையும் வகுப்போம் என்று அர்த்தமல்ல. அவர் இருந்தாலும் இந்திய அணியை எங்களால் வீழ்த்த முடியும்" என தெரிவித்துள்ளார்.