இலங்கையின் சுழற்பந்துவீச்சு மேஸ்ட்ரோவான ரங்கன ஹேரத், இடது கை பந்துவீச்சாளர்களில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலகளவில் பெஞ்ச் மார்க்கை செட் செய்துள்ளார்.
முத்தையா முரளிதரன் வரிசையில் ஆதிக்கம் செலுத்திய மற்றொரு இலங்கை ஸ்பின்னரான இவர் 1999 முதல் 2018 வரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 28 சராசரி மற்றும் 2.80 எகானமியுடன் 433 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 34 முறை ஐந்துவிக்கெட்டுகளும், 9 முறை 10 விக்கெட்டுகளும் அடங்கும்.
மிகவும் துல்லியமான, சர்ப்ரைஸ் கொடுக்கக்கூடிய கேரம் பால், ஆர்ம் பால் மற்றும் ஆஃப் பிரேக் போன்றவற்றால் சாம்பியன் வீரர்களை கலங்கடித்தவர் ஹேரத்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் சமீபத்தில் படைத்தார். நடந்து வரும் ஆஷஸ் தொடரில் 2 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை அள்ளிய அவர், வாசிம் அக்ரமின் 414 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்காக அறிமுகமானதிலிருந்து 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஸ்டார்க், 26.43 சராசரி மற்றும் 46.3 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 418 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டாப் 7-ல் இடம்பிடித்திருக்கும் அனைத்து பவுலர்களை விடவும் குறைவான ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருப்பர் ஸ்டார்க் மட்டுமே.
140கிமீட்டருக்கும் மேலான வேகம், ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றிற்கு பெயர்போன ஸ்டார்க்கின் இன்-ஸ்விங் யார்க்கர்கள் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்துள்ளன. காயத்தால் தன்னுடைய ரிதமை இழந்தாலும், மீண்டும் மீண்டும் மீண்டுவரும் ஸ்டார்க் தன்னுடைய கிளாஸை விட்டுக்கொடுக்காமல் ஜொலித்துவருகிறார்.
கிரிக்கெட் அறிமுகம் செய்ததிலேயே தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக இன்றளவும் இருந்துவருபவர் பாகிஸ்தான் ஃபாஸ்ட் மெசின் வாசிம் அக்ரம். டெஸ்ட் கிரிக்கெட்டில் 414 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அக்ரமின் சராசரி வெறும் 23.62 மட்டுமே. இந்தப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பவுலர்களையும் விடவும் சிறந்த சராசரி வைத்திருப்பவர் வாசிம் அக்ரம் மட்டுமே. புதிய பந்தில் பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யக்கூடிய வித்தைக்கு சொந்தக்காரர் வாசிம் அக்ரம்.
நியூசிலாந்து கிரிக்கெட் தயாரித்ததிலேயே தலைசிறந்த பவுலராக விளங்குபவர் இடதுகை ஸ்பின்னரான டேனியல் விட்டோரி. 1997 முதல் 2014 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய இவர், 113 போட்டிகளில் 34.36 சராசரி மற்றும் 2.59 எகானமி உடன் 362 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றவர் விட்டோரி.
இலங்கை அணியை உலக கிரிக்கெட்டில் தலைநிமிரச் செய்த வேகப்பந்துவீச்சாளர்களில் முதன்மையானவர் சமிந்தா வாஸ். 1994 முதல் 2009 வரை இலங்கை அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலேச்சிய வேகப்பந்துவீச்சாளர் வாஸ், 111 போட்டிகளில் 29.58 சராசரியுடன் 355 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். புதிய பந்தில் சிறந்த சீம் பவுலிங்கை வழங்கிய வாஸ், ஸ்விங் மற்றும் ஸ்லோ டெலிவரிகளை வீசுவதில் வல்லவர். அதுமட்டுமில்லாமல் ஸ்பின்னுக்கு சாதகமாக இலங்கையிலிருந்து தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக உருவெடுத்தவர்.
உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த இடதுகை பவுலர்களில் டாப் 7-ல் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா. தன்னுடைய துல்லியமான லைன் மற்றும் லெந்தில் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் ஜடேஜா, தன்னுடைய ஆர்ம் பால் மற்றும் சிறிய வேரியேசன் மூலம் தலைசிறந்த வீரர்களை திணறடித்துள்ளார். தலைசிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்படும் ஸ்டீவ் ஸ்மித்தின் ஸ்டம்பை பலமுறை கழற்றியுள்ளார் ஜடேஜா.
நவீன கிரிக்கெட் யுகத்தின் மிகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள ஜடேஜா, 89 டெஸ்ட் போட்டிகளில் 25.11 சராசரி மற்றும் 58.1 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 348 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சில் ஸ்விங் புரட்சியை ஏற்படுத்திய இடதுகை பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட். புதிய பந்தில் வேகம் மற்றும் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங்கில் இவர் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் திணறியுள்ளனர். ரோகித் சர்மாவிற்கு எதிராக சிறந்த ஸ்ட்ரைக் வைத்துள்ள பவுலர்களில் முதலில் இருப்பவர் இவர்தான்.
நியூசிலாந்திற்காக 2011 முதல் 2022 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 27.49 சராசரி உடன் 317 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.