2027 உலகக்கோப்பையில் ஏன் ருதுராஜ் கண்டிப்பாக இருக்க வேண்டும்..? முக்கிய காரணம்!
ருதுராஜ் கெய்க்வாட் 2027 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரால் தொடக்க ஆட்டக்காரராக மட்டுமல்லாமல், மூன்றாம் அல்லது நான்காம் வரிசையிலும் சிறப்பாக ஆடமுடியும். ஸ்பின்னர்களுக்கு எதிரான அவரது திறமை இந்திய அணியின் பலத்தை அதிகரிக்கும்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது வரை வெறும் ஒன்பது ஆட்டங்களில் மட்டுமே விளையாடி உள்ளார். அவர் தொடக்க ஆட்டக்கார என்பதால், பெரும்பாலும் அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதன்காரணமாகவே கடந்த 3 ஆண்டுகளில் அவர் ஒருநாள் போட்டிகளில் பெரும்பாலும் தேர்வாகவில்லை.
இந்திய அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், அவர்களுக்கு பேக்கப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் என அதிகமான தொடக்க ஆட்டக்காரர்கள் உள்ள நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் 3வது வரிசையிலேயே நிற்கவைக்கப்பட்டார்.
ஏன் ருதுராஜுக்கு இடம் கிடைக்கவில்லை?
குறிப்பாக ஒருநாள் அணியில் தொடக்க வீரராக ரோகித் சர்மா இருப்பதாலும், அவரது சராசரி 49.1 மற்றும் ஸ்டைக் ரேட் 92.80 என நல்ல நிலையில் உள்ளது. அடுத்ததாக சுப்மன் கில் ஆட்டமும் சிறப்பான நிலையில் உள்ளது, ஒருநாள் போட்டிகளில் சராசரி 56.36 மற்றும் ஸ்டிரைக் ரேட் 99.23ஆக உள்ளது.
அடுத்ததாக மூன்றாம் வரிசையில் களமிறங்கும் கோலியும் சிறப்பான பங்களிப்பு மற்றும் நான்காம் வரிசையில் களமிறங்கும் ஸ்ரேயஸ் ஜயர் ஆட்டமும் நல்ல நிலையில் உள்ளது. இப்படி இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக இருப்பதால் இந்தியா அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தசூழலில் தான் தற்போது நடந்துவரும் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயஸ் ஜயர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக நீண்ட நாட்களுக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் இந்தியா ஒருநாள் அணியில் இடம்பிடித்தார்.
சதம் விளாசி தன்னை நிரூபித்த ருதுராஜ்?
தற்போது நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்திய ருதுராஜ், தான் ஒரு திறமையான வீரர் என்பதை நிரூபித்துள்ளார். இதே போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தால் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் 15 வீரர்களில் ஒருவராக இருக்ககூடும்.
ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2027ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகப்கோப்பையில் ருதுராஜ் இடம்பிடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
2027 உலகக்கோப்பையில் ஏன் ருதுராஜ் இருக்க வேண்டும்?
ருதுராஜ் கெய்க்வாட் லிஸ்ட்-ஏ கிரிக்கெட், ஐபிஎல், டி20 கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். தொடக்க ஆட்டக்காரரான அவர் முதல் 30 பந்துகள் நிதனமாக ஆடி அதன்பிறகு அதிரடியாக ஆடக்கூடியவர். தொடக்கவீரராக மட்டுமில்லாமல் மூன்றாம் அல்லது நான்காம் வரிசையிலும் அவரால் ஆட்டத்தை எடுத்துச்சென்று முடித்துவைக்க முடியும்.
சமீபத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறிவரும் நிலையில், ஸ்பின்னர்களுக்கு எதிரான சிறந்த பேட்டரான ருதுராஜ் இந்திய அணியின் நம்பர் 4 இடத்திற்கு சிறந்த தேர்வாக இருப்பார். உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 5 வீரர்களில் ரோகித், கோலி, ருதுராஜ், ஸ்ரேயாஸ் இடம்பெற்றால் அணி தோற்கடிக்கவே முடியாத பலத்தை பெறும். இதனால் 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றால் இந்தியாவிற்கு அது அசுரபலமாக இருக்கும்.

