முஸ்தஃபிசூர் ரஹ்மான் web
கிரிக்கெட்

'முஸ்தஃபிசூர் ஒருபோதும் அதை செய்யமாட்டார்..' அதுதான் அவர் மனசு! சகவீரர்கள் பதில்!

முஸ்தஃபிசூர் மிகவும் அமைதியான நபர், பிசிசிஐ-பிசிபி இரு தரப்பு முடிவும் அவரை கலங்க செய்யவில்லை, அவர் அனைத்தையும் புன்னகையுடன் கடக்கிறார் எனவும், எங்களுக்கே அது ஆச்சரியமாக இருப்பதாகவும் சகவீரர்கள் கூறியுள்ளனர்..

Rishan Vengai

முஸ்தஃபிசூர் ரஹ்மானை சுற்றிய சர்ச்சைகள், பிசிசிஐ மற்றும் பிசிபி நடவடிக்கைகள், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் எதிர்ப்பு, மற்றும் முஸ்தஃபிசூரின் மனநிலை பற்றிய சகவீரர்கள் கருத்துக்கள் ஆகியவை உலகம் முழுவதும் பேசுபொருளாக உள்ளன. முஸ்தஃபிசூர், வெளிப்புற விவகாரங்களை கண்டு கலங்காமல், தனது பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் அங்கம் வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை 9.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது. இதற்கிடையே, வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறையில் இந்து மதத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

ipl, Mustafizur Rahman

இந்த பதட்டமான சுழலை அடுத்து, முஸ்தஃபிசூர் ரஹ்மானை கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என எதிர்ப்பலைகள் எழுந்தன. இதையடுத்து பிசிசிஐ அவரை, உடனே நீக்க வேண்டும் என கேகேஆர் அணி நிர்வாகத்திடம் வலியுறுத்தியிருந்தது. கொல்கத்தா அணியும் முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரப்ப மாட்டோம் என்றும் வங்கதேச அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

வங்கதேச போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கை மாற்ற முடிவு

இப்படி முஸ்தஃபிசூர் ரஹ்மானை சுற்றிய சர்ச்சை உலகம் முழுவதும் பேசுபொருளாக உள்ள சூழலில், பிசிசிஐ மற்றும் பிசிபி இருதரப்பு நடவடிக்கையும் முஸ்தஃபிசூரை பாதிக்கவில்லை என சகவீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருபோதும் அவர் அதை செய்யமாட்டார்..

பிசிசிஐ மற்றும் பிசிபி இரு தரப்பும் மூஸ்தஃபிசூர் நீக்கப்பட்ட விவகாரத்தில் பரபரப்பான சூழலை சந்தித்திருக்கும் சூழலில், வங்கதேச பிரீமியர் லீக்கில் விளையாடிவரும் முஸ்தஃபிசூர் ரஹ்மான் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். டெத் ஓவரில் குறைவான எகானமியுடன் அணிக்கு வெற்றியை தேடித்தரும் அவரின் மனநிலை எப்படி இருக்கிறது என்று சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

முஸ்தஃபிசூர் ரஹ்மான்

கிறிக்பஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "முஸ்தஃபிசூர் முற்றிலும் அமைதியானவர். அவர் மைதானத்திற்கு வெளியே இருக்கும் அனைத்து சர்ச்சை விவகாரங்களையும் கண்டு கலங்கவில்லை. அது பிசிசிஐ, வங்கதேச கிரிக்கெட் வாரியம், BPL அல்லது ICC என எதுவாக இருந்தாலும் சரி, அவர் வேலையை மட்டுமே பார்த்துவருகிறார்" என்று ரைடர்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக இருக்கும் முகமது அஷ்ரபுல் கூறியுள்ளார்.

முஸ்தாபிசூரின் சகவீரர் முகமது சைபுதீன் பேசுகையில், "நாங்கள் இருவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், நான் அவரை என்னுடன் உட்கார அழைத்தேன். அவர் வெளியில் நடக்கும் விசயங்களுக்காக ஏமாற்றமடைந்திருப்பார் என்று நினைத்தேன், ஆனால் அவர் அப்படி இல்லை" என்று கூறினார்.

மேலும் வங்கதேச அணியின் மூத்த உதவி பயிற்சியாளர் முகமது சலாவுதீன் பேசுகையில், முஸ்தபிசூரின் அமைதியான நடவடிக்கையால் தனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை என கூறினார். அவர் பேசும்போது, "எனக்கு அவரை நீண்ட காலமாகத் தெரியும், அவர் முகத்தில் புன்னகையுடன் அனைத்தையும் எடுத்துக்கொண்டதில் எந்த ஆச்சரியமுமில்லை, அதுவே அவருடைய மிகப்பெரிய பலமாக இதுவரை இருந்துள்ளது. அவர் வெளிப்புறம் நடக்கும் விசயங்களுக்காக ரியாக்ட் செய்தோ, எதாவது பேசியோ எப்போதும் தலைப்புசெய்திகளில் இடம்பெறமாட்டார். அதுதான் அவர்" என்று பேசினார்.