முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆப்கானிஸ்தான் வீரர்களையும் தடை செய்யலாம் என கருத்து தெரிவித்ததாக தகவல் பரவுகிறது. இது முஸ்லிம் வீரர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் அங்கம் வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை 9.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது. இதற்கிடையே, வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறையில் இந்து மதத்தைச் சேர்ந்த இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த பதட்டமான சுழலை அடுத்து, முஸ்தஃபிசூர் ரஹ்மானை கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என எதிர்ப்பலைகள் எழுந்தன. இதையடுத்து பிசிசிஐ அவரை, உடனே நீக்க வேண்டும் என கேகேஆர் அணி நிர்வாகத்திடம் வலியுறுத்தியிருந்தது. இவ்விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்ததுடன், ஐசிசிக்கும் கடிதம் எழுதியுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரப்ப மாட்டோம் என்றும் வங்கதேச அரசு முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தசூழலில் முஸ்தஃபிசூரை நீக்கியதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஷ் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருப்பதாக செய்தி பரவி வருகிறது..
வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், "வங்கதேசம் பாகிஸ்தான் அல்ல. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடும் வங்கதேசம் கிடையாது. இரண்டு நாடுகளையும் ஒரே அளவுகோலில் பார்க்க முடியாது. இந்த ஆண்டு ஏலத்தில் லிட்டன் தாஸ் அல்லது சௌம்யா சர்கார் போன்ற இந்து வீரர்கள் தேர்வாகியிருந்தால், அவர்களும் நீக்கப்பட்டிருப்பார்களா?
முஸ்தபிசூர் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் அல்ல. வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை ஆதரித்தவரும் அல்ல. முஸ்தபிசூர் ஒரு விளையாட்டு வீரர் மட்டுமே. அவருக்கு எதிரான நடவடிக்கை கொடூரமானது" என்று பேசியுள்ளார்.
இந்தசூழலில் முஸ்தஃபிசூர் ரஹ்மானை நீக்கிய சம்பவம் பேசுபொருளாக இருந்துவரும் சூழலில், இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஷ் கருத்து தெரிவித்திருப்பதாக செய்தி பரவுகிறது. அந்தசெய்தியில் 'ஆப்கானிஸ்தான் வீரர்களையும் விரைவில் ஐபிஎல்லிருந்து தடை செய்துவிடுவார்கள்' என்று ஹபீஷ் தெரிவித்திருப்பதாக செய்தி பரவுகிறது. இதன்பொருள் முஸ்லிம் என்பதால் தான் முஸ்தஃபிசூர் தடைசெய்யப்பட்டதாகவும், விரைவில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த வீரர்களும் தடை செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்திருப்பது எரியும் தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போல மாறியுள்ளது. ஆனால் உண்மையில் அவர் அந்த கருத்தை சொன்னாரா என்பது தெரியவில்லை..