jemimah rodrigues x page
கிரிக்கெட்

மதரீதியான சர்ச்சை | ”தவறு செய்யாமலேயே குடும்பமாக வேதனையை அனுபவித்தோம்” - மவுனம் கலைத்த ஜெமிமா!

தனது வாழ்க்கையில் மிகவும் வேதனையான கட்டங்களை அனுபவித்தது தொடர்பாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தற்போது மவுனம் கலைத்துள்ளார்.

Prakash J

தனது வாழ்க்கையில் மிகவும் வேதனையான கட்டங்களை அனுபவித்தது தொடர்பாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தற்போது மவுனம் கலைத்துள்ளார்.

இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா

மைதானக் களம் என்பது ஒருபோதும் சாதி, மதத்திற்காக வகுக்கப்பட்டது அல்ல; அது சாம்பியன்களுக்காக உருவாக்கப்பட்டது. அதனால்தான் உலகில் எந்த விளையாட்டுப் போட்டியிலும் வெற்றிபெறும் வீரர்களின் முகங்களே பிரகாசிக்கப்படுகின்றது. ஆனால், தற்போதைய இணைய உலகம் அவர்களுடைய சாதிக்கும், மதத்திற்கும் அரிதாரம் பூச ஆரம்பித்துள்ளன. அதில் ஒருவராகப் பாதிக்கப்பட்டவர்தான் சமீபத்தில் இந்திய அணி உலகக்கோப்பையை முதல்முறையாக வெல்லக் காரணமாக இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ். இவர் அரையிறுதியில் அதிரடியாய் ஆடிய ஆட்டமே, இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைய வழிவகுத்ததுடன் உலகக்கோப்பையை முத்தமிடவும் வைத்தது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

அப்படியான வெற்றிக்குக் காரணமாக இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், அந்தச் சமயத்தில் மதரீதியாக ட்ரோல் செய்யப்பட்டார். அவர், பைபிளில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் குறித்து கூறியது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அவரது தந்தை மதமாற்றம் செய்ததாக வெடித்த பிரச்னைதான் கிரிக்கெட்டைத் தவிர்த்து, திரும்பிப் பார்க்க வைத்தது. அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றி பிறகு பேசிய ஜெமிமா, “இந்த வெற்றிக்காக இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று கூறி பேச்சை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “ 'நீங்கள் நிலைத்திருங்கள். கடவுள் உங்களுக்காக சண்டையிடுவார்' என்கிற பைபிளில் உள்ள ஒரு வசனத்தை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். மேலும், இந்த வசனத்தை நினைத்துக்கொண்டு நிதானமாக ஆடினேன்” என்று பேசியிருந்தார் ஜெமிமா.

தந்தையைச் சுற்றி எழுந்த சர்ச்சை என்ன??

அதாவது, தான் இறுதிக்கட்டத்தில் மிகவும் சோர்வாகவும், ஆற்றலை இழந்தும் இருந்த தருணத்தில் தனக்குத்தானே பைபிளின் இந்த வாசகத்தை சொல்லிக்கொண்டதாக தெரிவித்தார். இதுதான் அப்போது விவாதங்களுக்கு வழிவகுத்தது. வெற்றிக்குப் பிறகு சாதனைகள் நிகழ்த்திய பலரும், கடவுளுக்கு நன்றி சொல்வது என்பது இயல்பான ஒன்றுதான். ஒவ்வொரு வீரரும் தான் நம்பிக்கை வைத்திருக்கும் கடவுளுக்கு நன்றி சொல்வார்கள். பல வீரர்களும் சாதனையாளர்களும் இதற்கு முன்பு இதுபோல் கூறியிருக்கிறார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே என புகழ்பெற்ற வாசகம்கூட நம் நினைவிற்கு வரலாம். ஆனால், வலதுசாரிகள் தரப்பில் இருந்து ஜெமிமாவின் பேச்சு விவாத பொருளாக்கப்பட்டது.

தந்தையுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ்

தவிர, ஜெமிமா விவகாரத்தில் கடந்த ஆண்டு அவரது தந்தையையொட்டி நடந்த மதமாற்ற சர்ச்சையும் பின்னி பிணைந்துகொண்டது.

அதாவது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் உள்ள 100 ஆண்டு பாரம்பரிய கார் ஜிம்கானா கிளப்பின் உறுப்பினரில் இருந்து ஜெமிமா நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அதற்கு கிளப்பின் வளாகத்திற்குள் மதம் தொடர்பான நிகழ்வுகளை அவரது தந்தை இவான் ரோட்ரிக்ஸ் நடத்தியதாகவும் அந்த நிகழ்வுகளில் மத மாற்றம் செய்ய ஊக்குவிக்கப்பட்டதாகவும் அதுதொடர்பாக சிலர் புகார் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

அந்த செய்திகள் வெளியான நேரத்தில் ஜெமிமாவின் கிறிஸ்தவ மத நம்பிக்கை குறித்து எதிர்மறையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர் மீது மோசமான விமர்சனங்கள் அப்போது வைக்கப்பட்டது. ஆனால், இந்த மதமாற்ற குற்றச்சாட்டுகளை அப்போதே கிளப்பின் தலைவர் மறுத்திருந்தார். அதேபோல், ஜெமிமாவின் தந்தையும் கிளப் வளாகத்திற்குள் கூட்டங்கள் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் கிளப்பின் விதிகளுக்கு உட்பட்டே நடத்தியதாக விளக்கம் அளித்திருந்தார்.

”மிகவும் வேதனையாக இருந்தது..” - ஜெமிமா!

இந்த நிலையில் இதுதொடர்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்தியா டுடேவுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

jemimah rodrigues

அதில் அவர், “உண்மையைச் சொல்லப் போனால், அது எப்போது நடந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. அதை எதிர்கொள்வது எனக்கு ஒரு விஷயம். ஆனால், நாங்கள் செய்யாத ஒரு விஷயத்திற்காக என் பெற்றோர் அதில் இழுக்கப்பட்டபோது, ​​அது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த நேரத்தில், நாங்கள் செய்த அனைத்தும் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படிதான் இருந்தன, அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன. ஆனால், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களை மிகவும் பாதித்தன. ஏனென்றால் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை" என ஜெமிமா அதில் தெரிவித்துள்ளார்.