”என் சதத்தை விட இந்தியாவின் வெற்றியே முக்கியம்” - கண்ணீர் மல்க உருக்கமாக பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்!
”அரைசதம் அல்லது சதத்தையும்விட அணியின் வெற்றிதான் எனக்கு முக்கியமானதாக இருந்தது” என நேற்றைய போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், 2வது அரையிறுதிப் போட்டியில் ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 338 ரன்கள் குவித்தது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய இமாலய இலக்கான, இந்த ரன்னை இந்திய அணி விரட்டிப் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளது. இதுவரை 331 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டிப் பிடித்ததே ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச துரத்திப் பிடிக்கப்பட்ட இலக்காக இருந்தது. ஆனால், இதனை நேற்று தகர்த்து, சேஸிங்கில் 341 ரன்கள் எடுத்து புதிய வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி. தவிர, மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த ஆஸ்திரேலியாவுக்கும் நேற்றுடன் இந்திய அணி முடிவு கட்டியது. 2022-2025 வரை தொடர்ந்து 15 ஆட்டங்களில் வெற்றிபெற்று வந்த நிலையில், இந்திய அணி நேற்று அதற்கு முடிவுரை எழுதியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து, நேற்றைய இரவு இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரவாக அமைந்திருக்கும் நிலையில், இந்த வெற்றிக்கு முக்கியமாக வித்திட்டவர் ஜெமிமா ரோட்ரிக்ஸ். அவர், 134 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இந்திய அணி வெற்றிபெற்றதைக் கொண்டாடும் அதே சமயத்தில், உணர்ச்சிப்பெருக்கால் அவர் மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுதார். ஜெமிமாவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருக்கு, பிற வீராங்கனைகள் ஆறுதல் கூறினர். பின்னர், அவள் கைகளைக் கோர்த்து, மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு ‘நன்றி’ தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் சிறந்த ஆட்டநாயகியாகத் தேர்வுபெற்ற பிறகு பேசிய அவர், “இந்த வெற்றிக்காக இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னால் தனியாக இதைச் செய்திருக்க முடியாது. என் அம்மா, அப்பா, பயிற்சியாளர் மற்றும் என்னை நம்பிய ஒவ்வொருவருக்கும் நன்றி. கடந்த ஒரு மாதம் மிகவும் கடினமாக இருந்தது. இது ஒரு கனவுபோல உணர்கிறேன், இன்னும் முழுமையாக நம்ப முடியவில்லை. நான் மூன்றாவது வரிசையில் களமிறங்குவது எனக்குத் தெரியாது. அப்போது குளித்துக் கொண்டிருந்தேன். திடீரென என்னிடம் சொன்னார்கள். களமிறங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்புதான் என்னிடம் நம்பர் 3இல் இறங்க வேண்டும் எனச் சொன்னார்கள்.
என்னுடைய அரைசதம் அல்லது சதத்தையும்விட அணியின் வெற்றிதான் எனக்கு முக்கியமாக இருந்தது. நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடந்த ஆண்டு அணியிலிருந்து நீக்கப்பட்டேன். இந்த உலகக்கோப்பைத் தொடரிலும் ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டேதான் இருந்தேன். மனதளவில் நான் நன்றாக இல்லை. ஒரு மாதிரியாக பதற்றமாகவே இருந்தேன். நான் கட்டாயம் திறமையை நிரூபிக்க வேண்டும் என தோன்றியது. கடவுள்தான் எல்லாவற்றையும் நிகழ்த்தினார்.
'நீங்கள் நிலைத்திருங்கள். கடவுள் உங்களுக்காக சண்டையிடுவார்' என்கிற பைபிளில் உள்ள ஒரு வசனத்தை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். மேலும், இந்த வசனத்தை நினைத்துக்கொண்டு நிதானமாக ஆடினேன்.
கடைசியில் நான் கொஞ்சம் அதிரடியாக ஆட நினைத்தேன், முடியவில்லை. தீப்தி சர்மா ஒவ்வொரு தடவையும் என்னை ஊக்கப்படுத்தினார். நான் சோர்வுறும்போது என்னுடைய சக வீராங்கனைகள் என்னை தேற்றுகிறார்கள். எதற்கும் நான் க்ரெடிட் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் எதையும் தனி ஆளாகச் செய்யவில்லை. மைதானத்தில் ஒவ்வொரு ரன்னுக்கும் கோஷமிட்ட, ஆரவாரம் செய்த ஒட்டுமொத்த ரசிகர்கள் என்னை உற்சாகப்படுத்தினர்; ஊக்கப்படுத்தினர். நான் அணியிலிருந்து நீக்கப்பட்டது என்னை மிகவும் பாதித்தது. நீங்கள் அணியிலிருந்து நீக்கப்படும்போது, உங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும். ஏனென்றால் நான் எப்போதும் அணிக்கு பங்களிக்க விரும்புகிறேன்.
ஆனால் அன்று நான் வெளியே உட்கார்ந்து அதிகம் செய்ய முடியவில்லை. பின்னர் நீங்கள் மீண்டும் வரும்போது, கடந்த மாதத்தில் நடந்த எல்லாவற்றிலும் இது அதிக அழுத்தம். ஆனால் சில நேரங்களில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அங்கேயே தொங்கிக்கொண்டே இருப்பதுதான். விஷயங்கள் சரியான இடத்தில் விழும். எனவே என்னால் முடியாதபோது என்னை நம்பியவர்களுக்கும், எனக்காக இருந்தவர்களுக்கும், என்னால் இதை சொந்தமாகச் செய்ய முடியாததால் என்னைப் புரிந்துகொண்டவர்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்”எனத் தெரிவித்தார்.


