Kuldeep Yadav
Kuldeep Yadav Twitter
கிரிக்கெட்

IND v PAK: குல்தீப் சுழலில் சுருண்ட பாகிஸ்தான்! அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி!

Rishan Vengai

ஆசியக்கோப்பை தொடரில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்ப்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி முழுமையான ஒரு போட்டியாக நேற்று இரவு நடந்து முடிந்துள்ளது. லீக் போட்டியில் சொதப்பிய இந்திய அணி சூப்பர் 4 சுற்று போட்டியில் கம்பேக் கொடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

14 வருடத்திற்கு பிறகு கலக்கிய கோலி மற்றும் கேஎல் ராகுல்!

கடந்த 10ஆம் தேதி ஞாயிற்று கிழமை தொடங்கிய இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழை குறுக்கீட்டால் ரிசர்வ் டே மூலம் 11ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. டாஸ் வென்ற கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து அரைசதமடித்த இருவரும் முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர்.

Virat - KL Rahul

பின்னர் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். பின்னர் அதிரடிக்கு திரும்பிய இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விரட்டி இந்திய ரசிகர்களை ஆரவாரத்தில் தள்ளினர். அதிரடியை நிறுத்தாத இந்த ஜோடி பல வருடங்களுக்கு பிறகு அடுத்தடுத்து சதங்களை பதிவு செய்து அசத்தினர்.

விராட் கோலி 94 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிச்கர்கள் விளாசி 122 ரன்களும், கேஎல் ராகுல் 106 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 111 ரன்களும் சேர்க்க 50 ஓவர் முடிவில் இந்தியா 356 ரன்களை குவித்தது. இந்திய அணியின் 3வது மற்றும் 4வது வரிசை வீரர்கள் இருவரும் சதமடிப்பது இது 3வது முறையாகும். 2009க்கு பிறகு 14 வருடங்கள் கழித்து இந்த ரெக்கார்டை கோலி மற்றும் ராகுல் செய்துள்ளனர்.

அதிக ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி!

357 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, தொடக்கத்திலேயே ஆட்டம் காட்டினார் ஜஸ்பிரித் பும்ரா. கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக ஓய்விலிருந்து விட்டு வந்திருக்கும் நட்சத்திர பவுலர் பும்ரா, தான் ஓய்வில் எவ்வாறு தயாராகி வந்தார் என்பதை நிரூபித்து காட்டினார். ஓபனர் இமாமை பும்ரா வெளியேற்ற, மென் இன் ஃபார்மில் இருக்கும் கேப்டன் பாபர் அசாமை ஒரு மேஜிக் டெலிவரி மூலம் வெளியேற்றி அசத்தினார் ஹர்திக் பாண்டியா. அதற்கு பிறகு எல்லாமே குல்தீப்பின் மாயாஜாலம் என போட்டி மாறியது.

Kuldeep Yadav

பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் வீரர்களை நிற்கவே விடாமல் அடுத்தடுத்து வெளியேற்றி கொண்டே இருந்தார் குல்தீப் யாதவ். அவருடைய ரிஸ்ட் பவுலிங்கை கணிக்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள், எதிர்கொண்டு விளையாடவே தடுமாறினர். அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 128 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணியில், நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ராஃப் இருவரும் காயத்தால் பேட்டிங் செய்ய வராததால் வெற்றி இந்தியாவிற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. முடிவில் பாகிஸ்தான் அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

Kuldeep Yadav

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி இவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2008ஆம் ஆண்டு 140 வித்தியாசத்திலும், 2017ஆம் ஆண்டு 124 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்ததே அதிக மார்ஜின் தோல்வியாக இருந்தது. அதே போல 26 வருடங்கள் கழித்து 128 ரன்கள் என குறைவான டோட்டலில் சுருண்டு பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றின் அடுத்த போட்டியில் இந்திய அணி இன்று இலங்கை எதிர்த்து விளையாடுகிறது.