
ஆசிய கோப்பை 2023 தொடரானது ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெறுவதால் ஆசியக்கோப்பை தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கருதப்படுவதால், இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்துமுடிந்த லீக் போட்டியின் மோதலில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்ட நிலையில், இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்தியாவை பேட்டிங் செய்யுமாரு அழைத்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் மற்றும் கோலி இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து அரைசதம் அடித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தை அமைத்தது. பின்னர் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கோலி மற்றும் ராகுல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆடுகளத்தின் தன்மையை முதலில் தெரிந்துகொண்ட இந்த ஜோடி பின்னர் அதிரடியான ஆட்டத்திற்கு திரும்பியது.
கோலி மற்றும் ராகுல் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட இந்திய அணி 300 ரன்களை தொட்டது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராகுல் மற்றும் கோலி இருவரும் அடுத்தடுத்து சதங்களை பதிவு செய்து அசத்தினர். விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்களும், கேஎல் ராகுல் 106 பந்துகளில் 111 ரன்களும் விளாச 50 ஓவர் முடிவில் இந்தியா 356 ரன்களை குவித்தது. தன்னுடைய 47வது ஒருநாள் சதத்தை பதிவு செய்த விராட் கோலி இந்த ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
விராட் கோலி 98 ரன்களை கடந்த போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 13,000 ரன்கள் என்ற பெரிய மைல்கல் சாதனையை எட்டினார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை சச்சின் டெண்டுல்கர் (18,426 ரன்கள்), குமார் சங்ககரா (14,234 ரன்கள்), ரிக்கி பாண்டிங் (13,204 ரன்கள்), சனத் ஜெயசூர்யா (13,430 ரன்கள்) என 4 வீரர்கள் 13,000 ரன்களை எட்டியிருக்கும் நிலையில், கோலி இந்த மைல்கல்லை 5ஆவது வீரராக எட்டியுள்ளார்.
13,000 ரன்கள் என்ற இமாலய சாதனையை குறைவான இன்னிங்ஸ்களில் எட்டியிருக்கும் கோலி, சச்சினை பின்னுக்கு தள்ளி வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். 267 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை விராட் கோலி படைத்திருக்கும் நிலையில், சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்கள், ரிக்கி பாண்டிங் 341, சங்ககரா 363 மற்றும் ஜெயசூர்யா 416 இன்னிங்ஸ்கள் என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
கொழும்புவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் தன்னுடைய 4வது சதத்தை பதிவு செய்திருக்கும் விராட் கோலி, ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக 4 சதங்களை பதிவு செய்து அசத்தியுள்ளார். இதற்கு முன் இலங்கைக்கு எதிராக 2012ல் 128* (119) ரன்கள், 2017-ல் 131 (96) ரன்கள், 2017-ல் 110* (116) ரன்கள் என மூன்று முறையும், தற்போது 2023-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 94 பந்துகளில் 122 ரன்கள் என 4வது முறையும் சதங்களை பதிவுசெய்துள்ளார்.
தொடர்ச்சியாக ஒரே மைதானத்தில் 4 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கும் கோலி, சர்வதேச வீரர் வரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா உடன் கைக்கோர்த்துள்ளார்.
2023 ஆசியக்கோப்பை தொடரில் தன்னுடைய 4 சதத்தை அடித்திருக்கும் விராட் கோலி, ஆசியகோப்பையில் அதிகமுறை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும், இரண்டாவது ஆசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்த வரிசையில் சனத் ஜெயசூர்யா 6 சதங்கள், சங்ககரா 4 சதங்கள், ஷோயப் மாலிக் 3 சதங்கள் என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அடுத்தடுத்து சதங்களை பதிவு செய்து அசத்தினர். ராகுல் தன்னுடைய 6வது ஒருநாள் சதத்தையும், கோலி தன்னுடைய 47வது ஒருநாள் சதத்தையும் பதிவுசெய்தனர். 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த இந்த ஜோடி 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஆசிய கோப்பையில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்துள்ளனர்.
இந்த வரிசையில் பாகிஸ்தானின் முகமது ஷஃபீஷ் மற்றும் ஜாம்ஷெத் ஜோடி 224 ரன்கள், ஷோயப் மாலிக் மற்றும் யுனிஸ் கான் ஜோடி 223 ரன்கள், பாபர் மற்றும் இஃப்திகர் ஜோடி 214 ரன்களுடன் இருக்கின்றனர். பாகிஸ்தானின் இந்த உடைக்கமுடியாத சாதனையை உடைத்துள்ளனர் இந்திய வீரர்களான கோலி மற்றும் ராகுல் இருவரும். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அடித்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களும் இதுவாகும்.
இந்திய அணியின் 3வது மற்றும் 4வது வரிசை வீரர்கள் இருவரும் சதமடிப்பது இது 3வது முறையாகும். இதற்கு முன்பு 1999-ல் கென்யாவிற்கு எதிராக ராகுல் டிராவிட் மற்றும் சச்சினும், 2009-ல் இலங்கைக்கு எதிராக கம்பீர் மற்றும் விராட் கோலியும் அடித்திருந்த நிலையில், தற்போது 3வது முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அடித்து அசத்தியுள்ளனர்.