KL Rahul - Virat
KL Rahul - ViratTwitter

ஆசியக்கோப்பை 2023: அதிரடி சதம் விளாசிய கோலி மற்றும் ராகுல்! பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இலக்கு!

ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றுப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 357 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
Published on

2023 ஆசியக்கோப்பை தொடரானது ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. தற்போது சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்துவரும் நிலையில், இன்றைய பெரிய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளும் எதிர்வரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக பார்க்கப்படும் நிலையில், இரண்டு அணிகளின் மோதலானது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தங்களுடைய அபாரமான ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக்கால் இந்திய டாப் ஆர்டர் வீரர்களை திக்குமுக்காட வைத்தது. இந்நிலையில் ஆசியக்கோப்பையின் இரண்டாவது மோதலில் இந்திய அணி பாகிஸ்தானை எப்படி எதிர்கொண்டு விளையாடபோகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சை தெறிக்கவிட்ட ரோகித்-கில் இணை!

முந்தைய லீக் போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள், இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் என மூன்று இந்திய டாப் ஆர்டர்களின் ஸ்டம்புகளையும் தகர்த்தெறிந்தனர். அதனால் 66 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது இந்திய அணி. முடிவில் 266 ரன்களை மட்டுமே இந்தியாவால் எடுக்கமுடிந்தது. பின்னர் போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் இந்தியா தோல்வியில் இருந்து தப்பித்தது. முதல் போட்டியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு இந்த போட்டியில் இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.

Rohit - Gill
Rohit - GillTwitter

இந்நிலையில் சூப்பர் 4 சுற்றுப்போட்டியில் டாஸ் வென்ற பாபர் அசாம் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித்-கில் இணை, பின்னர் அதிரடிக்கு திரும்பியது. ஸ்விங்குகளை கட் செய்யும் விதமாக ரோகித் மற்றும் கில் இருவரும் களத்தில் இறங்கிவந்து அதிரடியான ஷாட்களை விளையாடினர். கேப்டன் ரோகித் சர்மா அடுத்தடுத்து சிக்சர்களாக பறக்கவிட, தன்னுடைய பிரைம் ஃபார்மை வெளிக்கொண்டுவந்த கில் கிளாசிக்கான ஷாட்களை விளையாடினார். போட்டிப்போட்டுக்கொண்டு இருவரும் பவுண்டரி சிக்சர்களாக விரட்ட, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் அதிகமானது. ரோகித் மற்றும் கோலி இருவரும் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து இந்தியாவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் 56 ரன்னிலும், கில் 58 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.

4 மாதங்களுக்கு பிறகு முதல் போட்டியிலேயே சதம் விளாசிய ராகுல்!

3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 24.1 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரிசர்வ் டேவான அடுத்தநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தொடங்கிய போட்டியில் கோலி நிதானமாக விளையாட, கே எல் ராகுல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாளில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இன்றைய நாளில் தன்னுடைய கிளாசிக் ஃபார்மை வெளிப்படுத்திய ராகுல் தன்னுடைய 6ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

kl rahul
kl rahul

மறுபுறம் அதிரடிக்கு திரும்பிய விராட் கோலி தன்னுடைய பங்கிற்கு வானவேடிக்கை காட்ட ஆரம்பித்தார். 9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட கிங் கோலி தன்னுடைய 47வது ஒருநாள் சதத்தை பதிவு செய்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 13000 ரன்களை குவித்து மற்றுமொரு மகுடத்தை சூடிக்கொண்டார் கோலி. விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்களும், கேஎல் ராகுல் 106 பந்துகளில் 111 ரன்களும் விளாச 50 ஓவர் முடிவில் இந்தியா 356 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி தன்னுடைய சேஸிங்கிற்காக காத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com