இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் 16 ஆண்டுகளாக விளையாடி வரும் மூத்த வீராங்கனையான ஹர்மன்பிரீத் கவுர் அணியினை சிறப்பாக வழிநடத்தியும் மற்றும் பல சாதனைகளை படைத்தும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் முதன்முதலில் ஆல்ரவுண்டராக 2009-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் டி20 போட்டிகளிலும் இடம்பெற்று அசத்தினார். 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்றார். அதன்பிறகு 2012 ஆசியக் கோப்பை, 2016 மற்றும் 2022 ஆசியப் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் பெற அணியை வழிநடத்தினார்.
2017-ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை அரைஇறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார். இதன்மூலம் உலகக்கோப்பை அரைஇறுதிப் போட்டியில் தனிநபர் அதிக ரன் குவித்தர்களில் முதலிடம் பெற்றார். மேலும் உலகக்கோப்பைகளில் இந்திய வீரர்கள் அதிக ரன்கள் குவித்தவர்களில் இரண்டாவது இடம்பெற்றார்.
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜசிசி மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பையில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார்.
2025-ஆம் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக ஒருநாள் உலகக்கோப்பை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
ஹர்மன்பிரீத் கவுர் இந்திய டி20 மகளிர் அணியினை 130 போட்டிகளில் வழிநடத்தி 77 போட்டிகளில் வெற்றிபெற வைத்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற முதல் கேப்டன் என சாதனை படைத்தார். இதற்கு முன் ஆஸ்திரேலியா கேப்டன் மெக் லானிங் 100 போட்டிகளில் வழிநடத்தி 76 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த சாதனையை முறியடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆட்ட நாயகி விருதை கேப்டன் ஹர்மன்ப்ரீத் பெற்றார். இதன்மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய மகளிர் அணிக்காக அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற வீராங்கனைகள் பட்டியலில் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜை அவர் சமன் செய்தார். இருவரும் தலா 12 முறை பெற்றுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் தலா 8 முறைகளுடன் ஸ்மிருதியும் ஷபாலி வர்மாவும் உள்ளனர்.