இந்திய மகளி்ர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுருக்கு டிஎஸ்பி பணி வழங்கப்படுமென பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வீராங்கனைகள் கோப்பையை நழுவ விட்ட போதிலும் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இந்தப்போட்டிகளில் இந்திய அணியை சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுரின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் கூறும்போது, ’கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் காவல்துறையில் இணைய விரும்பினார் ஹர்மன்பிரீத் கவுர். விளையாட்டு வீரராக இருந்தும் அவருக்கு பணி வழங்க, அப்போதைய முதலமைச்சர் பாதல் மறுத்துவிட்டார். தற்போது உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற பெரும் பங்களிப்பை அளித்து பஞ்சாப்புக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில் டிஎஸ்பி பணி வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்.