icc introduce two tier system pt
கிரிக்கெட்

”நான் கலக்கமடைந்தேன்” - டெஸ்ட் கிரிக்கெட்டில் ’Two-Tier’ சிஸ்டம் குறித்து முன். வீரர்கள் வேதனை!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அடுக்கு முறையை அமல்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.

Rishan Vengai

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அடுக்கு முறையை (two-tier system) 2027-க்கு பிறகு அறிமுகம் செய்யவிருப்பதாகவும், அதில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா முதலிய மூன்று நாடுகளுக்கு மட்டும் அதிகப்படியான போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அணி

அதற்காக விரைவில் ஐசிசி தலைவரான ஜெய் ஷா உடன் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் மைக் பேர்ட் மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) தலைவர் ரிச்சர்ட் தாம்சன் இருவரும் இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஆஸ்திரேலியாவின் செய்தித்தாள் ஒன்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த தகவல் வெளியான பிறகு முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்கா கேப்டன் க்ரீம் ஸ்மித் ஆகியோர் ’இந்த முறை நடைமுறைக்கு வந்தால் எதிர்காலத்தில் 3 நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடும்’ என்று விமர்சித்துள்ளனர்.

இரண்டு அடுக்கு முறை என்றால் என்ன?

இந்த இரண்டு அடுக்கு முறை என்பது கிரிக்கெட் உலகத்திற்கு புதுமையான விசயம் இல்லை, இந்த முறை ஏற்கனவே 2016 ஆண்டு முன்மொழியப்பட்டது. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் 12 நாடுகளில் முதல் அடுக்கில் 7 நாடுகளும், இரண்டாவது அடுக்கில் 5 நாடுகளும் பிரிக்கப்பட்டன. இரண்டாவது அடுக்கில் இருக்கும் நாடுகளை விட, முதல் அடுக்கில் உள்ள நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.

இதன் காரணமாக ஐசிசிக்கு வருமானமும் உயரும், டெஸ்ட் கிரிக்கெட்டின் மறுவாழ்வையும் உறுதிசெய்யமுடியும் என்று கூறப்பட்டது.

ஆஸ்திரேலியா அணி

ஆனால் அப்போது பிசிசிஐ, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்களின் எதிர்ப்பால், தேவையான வாக்குகளை ஐசிசியால் பெறப்படமால் கிடப்பில் போடப்பட்டது. இந்தமுறை சிறிய நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட் அதிகம் விளையாடுவதை பாதிக்கும் என்றும், தரமான அணிகளுக்கு எதிராக விளையாடாமல் எப்படி டெஸ்ட் கிரிக்கெட் வளரும் என்ற கேள்விகளையும் முன்னிறுத்தியது.

அப்போதைய முன்மொழிதலின் படி,

டயர் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும்,

டயர் 2-ல் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து முதலிய அணிகளும் பட்டியலிடப்பட்டன.

தற்போது அறிமுகமானால் என்ன மாற்றங்கள் இருக்கும்?

ஆஸ்திரேலியா செய்தித்தாள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இரண்டு அடுக்கு முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டால், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது கடைபிடித்துவரும் 4 ஆண்டுகளில் இரண்டு டெஸ்ட் தொடர் என்பது 3 ஆண்டுகளில் இரண்டு டெஸ்ட் தொடர்களாகவும், இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்கள் 5 போட்டிகள் கொண்டதாகவே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

england team

இந்த முக்கியத்துவம் மூன்று நாடுகளுக்கும் வழங்கப்பட்டால், அவர்களின் கிரிக்கெட் இன்னும் வளர்ச்சியடையும் என்றும், நிதிச்சுழற்சியின் முன்னேற்றம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

விமர்சிக்கும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள்..

டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக 100 ஆண்டுகளாக உழைத்த வெஸ்ட் இண்டீஸ்:

இரண்டு அடுக்கு முறை குறித்து பேசியிருக்கும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாயிட், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. நான் இரண்டு அடுக்கு முறையை கேள்விப்பட்டு கலக்கமடைந்துள்ளேன். வெஸ்ட் இண்டீஸ் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக ஐசிசியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த மக்கள்தொகையுடன் இருந்தாலும் கூட நாங்கள் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளோம். இப்போது, ​​நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, நாங்கள் ஓரங்கட்டப்படுகிறோம்.

டெஸ்ட் பாரம்பரியத்தை கொண்ட எங்களின் எதிர்காலம் வெறும் டி20 மட்டும் தான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. டி20 கிரிக்கெட்டை அனைவரும் பார்ப்பதில்லை, டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒரு கிரிக்கெட் வீரரின் திறனை உங்களால் கண்டறிய முடியும். எங்கள் நாட்டுக்காக மட்டும் பேசவில்லை, இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் சமமான முறையில் வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை ஐசிசி கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் 3 நாடுகள் தான் கிரிக்கெட் விளையாடும்:

இரண்டு அடுக்கு முறை குறித்து பேசியிருக்கும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித், ”மூன்று நாடுகளுக்கு மட்டும் அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது என்றால், எதிர்காலத்தில் உலகில் 3 நாடுகள் மட்டும் தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் என்பதை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா?. நிதிச்சுழற்சியை பொறுத்தவரையில் இது ஆரோக்கியமானதாக இருக்கலாம்.

ஆனால், மற்ற நாடுகளும் முன்னேற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை முதலிய நாடுகளும் முன்னேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.