முதல் 9 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகள்.. ஒரே தென்னாப்பிரிக்கா கேப்டனாக டெம்பா பவுமா வரலாறு!
2024-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை சிறப்பாக வழிநடத்திய டெம்பா பவுமா, முதல் அணியாக WTC இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
தென்னாப்பிரிக்கா கேப்டனாக மாறிய பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் டெம்பா பவுமா, சமீபத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 7 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 4 அரைசதங்களுடன் 54 சராசரியுடன் 609 ரன்களை குவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கேப்டனாக தோல்வியே இல்லாமல் தொடர்ந்து வெற்றிகளை குவித்துவரும் டெம்பா பவுமா, தென்னாப்பிரிக்காவின் சிறந்த கேப்டன்கள் வரிசையில் தன்பெயரை முதல் கேப்டனாக பதிவுசெய்துள்ளார்.
பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா..
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டி20 தொடரை 2-1 என தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றிய பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்த முதல் அணியாக வரலாறு படைத்தது.
இந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிக்கில்டனின் அபாரமான இரட்டை சதத்தின் உதவியால் 615 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா அணி, பாகிஸ்தானை முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆல்அவுட் செய்து ஃபாலோ ஆன் செய்ய நிர்ப்பந்தித்தது.
ஃபாலோ ஆனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி ஷான் மசூத்தின் 145 ரன்கள் உதவியால் 478 ரன்கள் குவித்தது. 58 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-0 என ஒயிட்வாஷ் செய்தது.
கேப்டனாக வரலாறு படைத்த டெம்பா பவுமா..
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை கேப்டனாக டெம்பா பவுமா வென்ற நிலையில், 1951-க்கு பிறகு முதல் 9 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளை பதிவுசெய்த முதல் டெஸ்ட் கேப்டன் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 1951-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் லிண்ட்சே ஹாசெட் இந்த சாதனையை இதற்கு முன்னர் படைத்திருந்தார்.
முதல் 9 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு கேப்டனாக அதிக வெற்றிகள்:
9 - பெர்சி சாப்மேன் (இங்கிலாந்து) - 1929
8 - வார்விக் ஆம்ஸ்ட்ராங் (ஆஸ்திரேலியா) - 1921
8 - லிண்ட்சே ஹாசெட் (ஆஸ்திரேலியா) - 1951
8 - டெம்பா பவுமா (தென் ஆப்பிரிக்கா) - 2025