"ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்துவதென எங்களுக்கு தெரியும்.." WTC ஃபைனல் குறித்து எச்சரித்த ரபடா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என ஒயிட்வாஷ் செய்திருக்கும் தென்னாப்பிரிக்கா அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 69.440 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி, 8வது வெற்றிக்காக 2024-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கிறது.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது ஜுன் 11-15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது.
ஆஸியை எங்களால் வீழ்த்த முடியும்..
எப்போதும் நாக்அவுட் போட்டிகளில் வெற்றியே பெறாத தென்னாப்பிரிக்கா அணி 2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் தருவாயில் இருந்தபோதும் கோட்டைவிட்டது. மீண்டும் ஒரு இறுதிப்போட்டியாக 2024-2025 WTC பைனலுக்கு சென்றிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி, இந்தமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC பைனல் குறித்து பேசியிருக்கும் ரபாடா, "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி போன்ற ஒரு பெரிய சந்தர்ப்பமானது உங்களுடைய சிறந்த திறனை வெளிக்கொண்டுவர தூண்டுகிறது. உண்மையில் இறுதிப்போட்டியானது வெகு தொலைவில் உள்ளது, ஆனால் அதற்கான தயாரிப்புகளை நாங்கள் செய்துவருகிறோம்.
இறுதிப்போட்டியை பொறுத்தவரையில் தென்னாப்பிரிக்காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே எப்போதுமே கடுமையான போட்டி இருந்து வருகிறது, ஏனென்றால் நாங்கள் இருவருமே ஒரே மாதிரியான கிரிக்கெட்டை விளையாடிவருகிறோம். நாங்கள் எந்தளவு கடினமான கிரிக்கெட்டை விளையாடுகிறோமோ, அவர்களும் அதே அளவுக்கு கடினமான தாக்குதலோடு வருவார்கள்.
இருப்பினும் ஆஸ்திரேலியாவை எப்படி தோற்கடிப்பது என்பது எங்களுக்கு தெரியும். சமீபத்தில் எங்களுடைய சிறந்த ஃபார்மேட்டாக டெஸ்ட் கிரிக்கெட் இருந்துவருகிறது. எங்களுடைய பாரம்பரியத்தை எடுத்துக்கொண்டால் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர்கள் இருந்துள்ளனர், கிடைத்த இந்த வாய்ப்பில் சிறந்ததை வெளிக்கொண்டுவருவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்று SuperSport உடன் பேசியுள்ளார்.