“கோலி கிரிக்கெட்டின் ஜாம்பவான்.. நான் அவரைப் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்” - சாம் கான்ஸ்டாஸ்
பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதுமே பரபரப்பாக இருந்தாலும 19 வயது இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் களத்திற்கு வந்தபிறகு, தொடரில் பீக் அடித்த பல சம்பவங்கள் இருந்தன. அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே பும்ராவிற்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி சிக்சர்களாக பறக்கவிட்ட சாம் கான்ஸ்டாஸ் அரைசதம் விளாசி அசத்தினார்.
அதுமட்டுமில்லாமல் “பும்ராவை சிக்சர்களுக்கு அனுப்பிய பிறகு ரசிகர்களை சத்தம் எழுப்ப சொல்லி சைகை காட்டியது; விராட் கோலியுடன் தோள்பட்டை மோதல்; பும்ரா விக்கெட்டின் போது செலப்ரேஷன்; ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்யும்போது பேசி தொல்லை செய்துகொண்டே இருந்தது; கவாஜாவுக்காக பும்ராவிடம் வார்த்தைகளை பறிமாறிக்கொண்டது” என கான்ஸ்டாஸ் ஒரு பரபரப்பான டெஸ்ட் தொடரை கொண்டிருந்தார்.
இந்த பையன் வந்தபிறகு தான் பார்டர் கவாஸ்கர் டிரோபியே களைகட்டுது என இந்திய ரசிகர்களே சொல்லும் அளவு பரபரப்பான டெஸ்ட் தொடரை கொண்டிருந்த கான்ஸ்டாஸ், விராட் கோலியுடனான மோதல் சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
விராட் கோலி கிரிக்கெட்டின் ஜாம்பவான்..
விராட் கோலியுடனான தோள்பட்டை மோதலுக்கு பிறகு சாம் கான்ஸ்டாஸ் விராட் கோலியின் தீவிர ரசிகர் என்ற வீடியோ வைரலாக பரவியது. அந்த சம்பவத்திற்கு விராட் கோலியை பல தரப்பினர் கடிந்துகொண்டாலும், சாம் கான்ஸ்டாஸோ அது விளையாட்டின் ஒரு பகுதி என்று தெரிவித்தார்.
அந்தவகையில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு பிறகான நேர்காணலில் பேசியிருக்கும் கான்ஸ்டாஸ், ”சிறுவயதிலிருந்தே விராட் கோலி தான் என்னுடைய ரோல் மாடல், அவரை என் குடும்பத்திற்கே மிகவும் பிடிக்கும். அந்த மோதலுக்கு பிறகான போட்டியின்போது, நான் அவரை சந்தித்து நிறைய பேசினேன். அவரிடம் நீங்கள் தான் என்னுடைய ரோல் மாடல் என்று கூறினேன். அவருக்கு எதிராக விளையாடுவதே உண்மையில் எனக்கு கவுரவம்.
நான் அவரை முதலில் களத்தில் எதிர்கொண்ட போது , விராட் கோலி என் முன்னே பேட்டிங் செய்கிறார்' என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு அந்தளவு நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. இந்திய மக்கள் களத்தில் அவருக்குப் பின்னால் முழுமையாக இருந்தது, அவரது பெயரைக் கோஷமிட்டது. இது ஒரு நம்பமுடியாத அனுபவம்" என்று கோட் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியுள்ளார்.
மேலும், கோலி மிகவும் எளிமையான மற்றும் அன்பான மனிதர், என்னுடைய இலங்கை தொடருக்கு எனக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான், மூன்று வடிவங்களிலும் சிறந்த வீரர். நான் அவரைப்போலவே எதிர்காலத்தில் வர ஆசைப்படுகிறேன் என்று பகிர்ந்துகொண்டுள்ளார்.